பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41


சந்: எனக்கும் அவர் பணத்துக்குமா கல்யாணம்!

சிங்: உன் கலியாணத்தை நான் பார்த்துத்தானே நடத்த வேண்டும்.

சந்: எனக்கு சாம்பசிவம்தான் மாப்பிள்ளை என்று முடிவு செய்துவிட்டேன் அதை மாற்ற முடியாது. அப்பா தாங்கள் அதை மறுக்கக்கூடாது.

சிங்: பெண்கள் திருமணத்தை பெற்றோர்தானம்மா நடத்த வேண்டும். உன் தாய் கல்யாணம் — உன் பாட்டி கல்யாணம் எல்லாம் பரம்பரை பரம்பரையாக பெற்றோர்கள் பார்த்து அவர்களுக்கு பிடித்தமானவர்களுக்குத் தான் நடத்தி வந்திருக்கிறார்கள்.

சத்: அப்பா! உங்களை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். என்னை கன்னியாக்கிவிட வேண்டாம் அப்பா.

சிங்: எப்படியானாலும் சரி, உனக்கும் நல்லூர் ஜெமீன் தாரருக்கும் வெள்ளிக்கிழமை கல்யாணம். அதற்குத்தயாராயிரு.

சந்: வியாழக்கிழமை என் பிணத்தைத்தான் பார்ப்பீர்கள்.

சிங்: மிரட்டுகிறாயா?

சந்: ஒரு பெண் என்ன செய்து விடுவாள் என்று தானே எண்ணுகிறீர்கள். அதையும் பாருங்கள்.

சிங்: சந்திரா!

சந்: நீர் பெற்றீர் வளர்த்தீர். சந்தையில் விற்கும் பொருளைப் போல யாரோ ஒருவருக்கு என்னை விற்க தயாராயிருக்கிறீர். அதற்கு இவர் தரகர்.

சிங்: சந்திரா என் கோபத்தை அதிகமாக்காதே. உன்னை அடிமையாக்குவதற்கா நல்லூர் ஜமீன் தாரருக்கு மனைவியாக்குகிறேன். அவரிடம் ஏராளமான சொத்து இருக்கிறது எனக்குப் பின் நீ சுகமாக கஷ்டப்படாமல் வாழ வேண்டுமென்றுதான் அவருக்கு உன்னை திருமணம் செய்கிறேன். அதனால் எனக்கும் அந்தஸ்து ஏற்படும்.

சந்: ஜமீன்தாரருக்கு மனைவியாக்கினால் உங்களுக்கு அந்தஸ்து ஏற்படும். அதைவிட ஒரு ராஜாவுக்கு என்னை வைப்பாட்டியாக்கினால் இன்னும் அந்தஸ்து அதிகமாகுமே. (கன்னத்தில் அடித்து விடுகிறார்).