பக்கம்:சந்திரோதயம், நாடகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

மாயே: ஏன் என்னைப்போல இளிச்சவாயன் வேறு யாரும் கிடையாது என்று என்னை கூப்பிட வந்தாயா?

கோ: தாங்களும் மக்களுக்கு நன்மைகள் செய்து வருவதை கேள்விப்பட்டே வந்தேன். நாங்களும் எங்களால் இயன்றளவு செய்து வருகிறோம். தாங்கள் மறுக்கக் கூடாது.

மா: என்ன கழகம்.

கோ: புத்துலகக் கழகம்.

மா: கோவிலில் மாங்காய் மாலையை திருடிக்கொண்டு ஓடினானே துரைராஜ்— அவன் உங்கள் கழகத்திலே தானே பணிபுரிந்து வந்தான் ?

கோ: ஆமாம். துரைராஜைத் தங்களுக்குத் தெரியுமா?

மா:தெரியும். உனக்கு அவன் சங்கதி தெரியுமா ? அவன் ஒரு இடத்தில் கொள்ளையடித்திருக்கிறான்.

கோ: எங்கள் துரைராஜை அப்படியெல்லாம் கூறாதீர்கள். அப்படிப்பட்டவனல்ல எங்கள் துரைராஜ். ஒருக்காலும் தவறு செய்யவே மாட்டான்.

மா: துரைராஜை பேசினால் உனக்கு ஏன் கோபம் வருகிறது.

கோ: துரைராஜைப்பற்றி உயிருக்குயிரான நண்பன் எனக்கு தெரியாதா. அவனது குணம் அவன் ஒருக்காலும் அம்மாதிரியான காரியம் செய்திருக்க மாட்டான்.

மா: நீயும் அந்த திருடனுடைய நண்பன் தானா?

கோ: ஜமீன் தாரரே ! நீங்கள் பணம் படைத்தவராக இருக்கலாம் உம்முடைய பணம் என்னையும் எங்கள் கழகத்தையும் ஒன்றும் செய்துவிடமுடியாது. நீர் எங்கள் துரைராஜைப்பற்றி கேவலமாகப் பேசினால் மரியாதை கெட்டுவிடும்.