பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அந்தச் சாப்பாடும் இந்தச் சாப்பாடும் சமமாகிப் போய்விடும் அல்லவா? அவர்கள் சாப்பிட முடியாத போது சாப்பிட்டால் அல்லவா, நாம் சாப்பிடுவதற்கு மரியாதை கிடைக்கும்! என்று கருதுகின்ற காலத்திலே நாம் வாழ்வதனாலே தான் இந்தக் கருத்துக்கள் எவ்வளவு உயரத்திலே இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்கிறேன். சமண இலக்கியத்திலே இன்னொரு போக்கு இருக்கிறது. குறிப்பிட்ட இனத்தையோ குறிப்பிட்ட மொழி பேசுகிறவர்களைப் பற்றிய பழிப்போ இருக்காது அவர்களைக் கேவலப்படுத்துகின்ற செய்தி இருக்காது, தர்க்கரீதியாக தங்களுடைய கொள்கைகளை நிறுவும் ஒரு பணியிலே தான் அந்தச் சமண இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றன. சமண இலக்கியங்களுடைய அற்புதமான சாதனை என்று நாம் அவர்களுடைய இலக்கண, நிகண்டுப் பணிகளையும் சீவக சிந்தாமணி காவியத்தையும், சொல்ல நேரிடுகிறது.

சிந்தாமணி அற்புதமான காவியமாகக் கருதப்படுகிறது. சமண சமயத்துக்கு இந்தக் காவியம் எப்படி ஒத்துப்போனது என்பது தான் எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. சமணர்கள் இதை எப்படி ஏற்று கொண்டார்கள் என்று கூட எனக்கு வியப்பு தோன்றுகிறது. ஏனெனில் சீவகன் போகிற வழியெல்லாம் திருமணம் செய்து கொண்டே போகிறான், நபிகள் நாயகம் அவர்கள் விதவைகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும், பெண்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அன்றைக்கு இருந்த சமூகத்தில் தன்னுடைய இனத்தின் சக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும், பல திருமணம் பண்ணினார்கள். சீவகனோ பெரிய காவியம் உண்டாக்குகின்ற மாதிரி கல்யாணங்களைப் பண்ணிக் கொண்டே போகின்றான், சமணர்கள் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டுச் சொல்லப்படுவதுண்டு. அவர்கள் கலைகளை வெறுத்தவர்கள் என்று சொல்வார்கள், கலைகள்