பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VI


காதலையும் வீரத்தையும் கொடையையும் பெரிதும் போற்றி வந்த சங்கத் தமிழனின் வாழ்வியல் உணர்வில் அறவழிப்பட்ட நீதிகளைப் பற்றிச் சிந்தித்துப் பாடல்கள் இயற்றி மாற்றத்தைத் தோற்றுவித்த பெருமை வட புலத்திலிருந்து தென்புலம் பெயர்ந்து வந்த சமண, பெளத்த சம்யங்களையே பெரிதும் சாரும். நீதி புகட்டும் அற நூல்களான திருக்குறள், பழமொழி நானூறு, நாலடியார், நான்மணிக் கடிகை, திரிகடுகம், ஆசார கோவை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, முதுமொழிக் காஞ்சி, சிறுபஞ்ச மூலம், ஏலாதி என அறவழிப்பட்ட நீதி நூல்களாக எழுதிக் குவித்துத் தமிழைச் செழுமைப்படுத்தினர் சமண, பெளத்த சமயத் தமிழ்ப் புலவர்கள்.

இலக்கியச் சுவையின்றிக் கூறும் நீதிகளைவிட வாழ்ந்து சென்ற நண்பர்களின வாழ்வியலைக் காப்பியப் போக்கில் கூறி அதன் வழியில் நீதிகளைப் புகட்டினால் மக்களின் உள்ளத்தில் உரமாகப் பதியவைக்க முடியும் என்ற உணர்வின் அடிப்படையில் காப்பியங்களைப் படைக்க முனைந்தனர். இதன்மூலம் தங்கள் சமய உண்மைகளை, தத்துவச் சிறப்புகளை, கொள்கை, கோட்பாடுகளை எளிதாக மக்களுக்கு உணர்த்த முடிந்தது. இதற்காக தமிழில் நீதியுணர்வு பொங்கும் காப்பியப் படைப்புகளாக சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான பல காப்பியப் படைப்புகளை சமண, பெளத்த சமயப் புலவர் பெருமக்கள் தமிழில் உருவாக்கினர்.

அவ்வாறே தமிழகம் வந்த இஸ்லாம் தன் மார்க்கத் தத்துவங்களைத் தமிழில் சொல்ல விழைந்ததன் விளைவாக ஒழுக்கவியல் அடிப்படையிலான ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் எழுதிக் குவிக்கப்பட்டன. 28 இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்கள் படைக்கப்பட்டன. புலவர் நாயகம் சேகனாப் புலவர் ஒருவர் மட்டுமே நான்கு காப்பியங்களை உருவாக்கித் தந்துள்ளார்.