பக்கம்:சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

எடுத்துக் கொண்டு வந்து, கொடுக்கும் தபால்காரரே காதல் கடிதம் எழுதத் தொடங்குகிற மாதிரி, தத்துவக் கருத்துக்களைக் கொடுப்பதற்கு வந்த சமணர்கள் தமிழில் ஈடுபட்டு, முழுக்க முழுக்க தங்களைச் சமப்படுத்தி கொள்கின்ற நிலையைப் பார்க்கின்றோம். இலக்கியத்திலே தொல்காப்பியத்திற்கு அடுத்தாற்போல் சிறந்த நூல் என்று சொல்லப்படுகின்றது நன்னூல் அந்த நன்னூலைக் கொடுத்தவர் சமண முனிவர். நாலடியார், நான்மணிக்கடிகை போன்ற சிறந்த நீதி நூல்களைக் கொடுத்தவர்கள் சமணர்கள். சீவக சிந்தாமணி, சூடாமணி, பெருங்கதை, வளையாபதி போன்ற, சிறந்த காவியங்களை தரமுள்ள காவியங்களைக் கொடுத்தவர்கள் சமணர்கள் அதே மாதிரி சூடாமணி போன்ற, நிகண்டுகளைத் தமிழுக்கு கொடுத்தவர்கள் சமணர்கள் என்று சொல்லுகின்ற பொழுது, அவர்களுடைய சாதனைகளைப்பற்றி நான் பெருத்த ஆச்சரியமடைந்தேன். அவர்களுடைய சாதனைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள்ளே அடங்குகின்ற சாதனையாக இல்லை நான் ஏற்கெனவே கூறிய மாதிரி தாக்குதல்களுக்கு மத்தியிலே இத்தனை வித்தைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது.

தமிழ் இலக்கியதினுடைய போக்கைக் கூட இவர்கள் கொஞ்சம் திருப்பியிருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். தமிழ் இலக்கியத்தினுடைய இம்மையிலே இன்பம் காணுகிற போக்கு, இன்றைய வாழ்க்கையை நுகர்கிற போக்கு இலக்கியங்களுடைய போக்கு அவற்றிலிருந்து சற்று மாறி, அகம் புறம என்று பேசிக்கொண்டிருந்ததை மாற்றி இகம்பரம் என்று பேசவைத்திருக்கிறார்கள் இந்த சமணர்கள் வாழ்க்கையை அகம் புறம் என்று பாடிக் கொண்டிருந்த நிலையை மாற்றி அற நூல்களையும் அறிவியல் நூல்களையும் எழுதுகிற, ஒரு போக்கை தமிழிலே அவர்கள் உண்டாக்கியிருக்கிறார்கள்.