பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. உமறுப்புலவரும் ஒண்டமிழும்

முன்னுரை

"செந்தமி ழாலே சீறா சிறப்புடன் பனுவல் செய்தே

உந்திய புகழ்பெற் றோங்கும் உமறு'

எனப் பாராட்டப் பெற்றுள்ள உமறுப் புலவர் செய்துள்ள சீறாப்புராணத்தை இஸ்லாமியக் காவியம் என்பதினும் இன் தமிழ்க் காவியம் என்றே கூறலாம்.

கவிதையை வரையறுக்கும் மேலைநாட்டு அறிஞர்கள் தேர்ந்த சொற்களைத் தேர்ந்த இடத்தில் தேர்ந்த முறையில் இட்டு யாப்பது கவிதை என்று கூறுவர். இன் தமிழ்ச் சொற்களுடன் அரபி, பார்சி சொற்களைப் பெய்து உமறுப்புலவர் யாத்துள்ள சீறாப்புராணத்தில் அவர்தம் சொல்லாட்சித் திறனைக் காண்போம்.

சொல்லாட்சியின் இன்றியமையாமை

உரைநடையில் சொற்கள் நடமாடுகின்றன என்றும், கவிதையில் சொற்கள் நடனமாடுகின்றன என்றும் கூறுவர். காட்டில் மயிலாடும் அழகுக் கட்சியைச் சிற்பி, ஒவியர், பாடகர், கவிஞர் ஆகிய நால்வரும் கண்டால் அவர்கள் தம்முடைய ரசனையைத் தனித்தனியே எவ்வாறு வெளிப் படுத்துவார்கள் என்று கூறியுள்ள டாக்டர் மு.வ. அவர்கள் கவிதை பற்றிக் குறிப்பிட்டிருப்பது கவிதையில் சொல்லாட்சியின் இன்றியமையாமையை உணர்த்துவதாக உளளது.