பக்கம்:சமயந்தோறும் நின்ற தையலாள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. 'திருவாசகத்தில் ஒரு வாசகம்’

¿ திருவாசகம் ஒரு குறிக்கோள் இலக்கியம். வாழ்க் கைக்கு வழிகாட்டி உயர்த்துகின்ற ஒரு நூல். கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வேண்டும் என்று வந்த மேலை நாட்டுப் பாதிரி ஜி.யூ. போப் தமிழ்மொழியைக் கற்றுத் திருவாசகத்தைப் படித்துத் தன்னுடைய ஆங்கில மொழியில் மொழிபெயர்த்தார். இத்தனைக்கும் திருவாசகம் "நமச்சிவாய வாழ்க; நாதன்தாள் வாழ்க" என்று சிவனுடைய பெருமையைப் பற்றியே பேசத் தொடங்கி முடிகின்றது. அவ்வாறு இருந்தும் போப் ஏன் இதைத் தனது மொழியில் மொழிபெயர்த்தார் என்று பார்த்தால், இறைவனுடைய ஒப்பற்ற கருணைத் திறனைத் திருவாசகத்தைப் போன்று வேறு எந்த நூலும் வெளிப்படுத்தவில்லை என்பதே காரணமாகும். "திரு வாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்பது இந்த நாட்டுப் பழமொழி. "கருங்கல் மனமும் கரைந்து தொடு மணற்கேணியாகும்" என்பது சிவப் பிரகாசர் கண்ட முடிவு.

தமக்குத் திருமணமான முதல் இரவிலும் இராமலிங்க வள்ளலார் திருவாசகத்தைத் தம் மனைவிக்குப் படித்துக் காட்டி மனமகிழ்ந்தார் என்பது நாம் அறிகிற வரலாறு. எலும்புருக்கும் பாட்டு என்று போப் திருவாசகத்தைப் பாராட்டுவதோடு, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க" என்ற தொடருக்கு இணையான கருத்துடைய ஒரு தொடர் உலக இலக்கியத்திலேயே