பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 103
 

படைத்துக் காட்டுகிறார். ஆனால் அதே காலத்தில் அவர் தன்னுடைய இலட்சியங்களையே. இலக்கியங்களாகப் படைக்கிறார் என்பதையும் அவருடைய ஆர்வ உணர்வுகளே அன்னை மொழியாம் அமுதத் தமிழில் எழில் உருவம் பெற்று வெளிவருகின்றன என்பதையும் மறந்துவிடக் கூடாது.

அவர் தமது இலட்சியங்களை, தனது இலக்கியத்தில் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும், தனது தம்பிகளின் வாழ்க்கையிலும் தனது ஈடு இணையற்ற தமிழ்ப் பெருங்குடி மக்கள் வாழ்க்கையிலும் உருவாக்கத் துடிதுடிக்கிறார்; உருவாக்குகிறார். ஏன்? உருவாக்கியும் உள்ளார், என்பதை எண்ணிப் பார்க்கும்போது, திருவள்ளுவரின் படிைப்புக்குத் தனது வாழ்க்கையின் மூலம் உரை காண வந்த தோன்றலோ அறிஞர் அண்ணா என்று கருத வேண்டியுள்ளது.

அறிஞர் அண்ணா “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்ற புத்தகத்தில் “ஜனநாயக முறையில் ஈடுபட்ட தலைவர்களாக - அமைச்சர்களாக உயர்ந்து விடுவதாலேயே மண்டிைக்கனம் கொண்டுவிடாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

அறிஞர் அண்ணா 1967 பொதுத் தேர்தலில் ஆட்சிக்குரிய தகுதியுடையவராக வெற்றி பெற்ற போது, மிடுக்காகப் பேசாமல், அடங்கிப் பேசிய பண்பும், தமிழகத்தில் சிறந்த அரசியல் தலைவர்களை மதித்து அவர்கள் வீடு தேடிச் சென்று ஒத்துழைப்புத்தர வேண்டிக் கேட்டுக் கொண்டமையும் இந்திய நாட்டு வரலாற்றிலேயே இதற்கு முன் நிகழ்ந்ததில்லை.