பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மறுமலர்ச்சி என்பது புதியன வேட்டல்! பழைய தலைமுறையைச் சேர்ந்தவன் குறிசொல்லும் கோணங்கி! பாரதி மறுமலர்ச்சிக் கவிதையில் முடிசூடா மன்னன்! ஏன். அவன் தன் வட்டங்களையும்கூடத் தாக்கியவன்! புரட்சிச் சிந்தனையாளன்! பாரதி, புதிய கோணங்கியாக நின்று, நமது நாட்டின் மறுமலர்ச்சிக்குக் கட்டியம் கூறி வரவேற்கின்றான்!

மறுமலர்ச்சிக்கு முதல் தேவை படிப்பு. அதனால், “படிப்பு வளருது! பாவம் தொலையுது!” என்று பாடினான் பாரதி. ஆனால், கடந்தகால வரலாற்றில் படித்தவர்களில் ஒரு சிலராலேயே மறுமலர்ச்சி இயக்கம் பயன்பெற்றது.

பலர் மானிடத்தின் வட்டத்தைச் சுருக்கிவிட்டனர்! தந்திரமாகச் சாதி, ஊழ் முதலியனவற்றைப் படைத்து, வளரும் சமுதாயத்திற்குத் தீங்கிழைத்து விட்டனர். இவர்கள் மெத்தப்படித்தவர்கள்; சாத்திரங்கள் செய்து சதி செய்தவர்கள் ஆதலால், கவிஞன் பாரதி, புதிய கோணங்கியில்,

“படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான், போவான் ஐயோவென்று போவான்!”

— என்கிறான். (பாரதியார் கவிதைகள் பக். 221 புதிய கோணங்கி)

படித்தவர்களை மக்கள் நம்புகின்றனர். ஆதலால், படித்தவர்கள் சூது பண்ணக்கூடாது. சென்ற காலத்திலும் சரி, இன்றும் சரி படித்தவர்களில் பலர் — சாதாரண மக்களுக்கு எதிராகச் சூது செய்து கொண்டு தான் வருகின்றனர்! என்று இந்தச் சூது ஒழியும்!