பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இந்த அச்சம் நமக்கு என்று தொலையுமோ, அன்றுதான் நாட்டில் நல்லவர்கள் வாழ்வார்கள்! நல்லன நடக்கும்!

இதனை, புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் ஜைனேந்திரகுமார் எழுதிய ‘தியாக பாத்திரம்’ என்ற கம்பீரமான குறுநாவல் உணர்த்துகிறது. காந்திய தத்துவமாகிய சாத்வீக எதிர்ப்பை அவர் தத்துவார்த்த ரீதியுல் உருவாக்கியுள்ளார்.

தனி மனிதனை, சமூகம் வளர்க்க கடமைப்பட்டுள்ளது. தனிமனிதன் அறியாமல் அல்லற்படுவதற்குச் சமூகம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பாவேந்தனின் கருத்து.

“கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டு”

என்பன, பாவேந்தன் பாடல் வரிகள். அதுபோலவே, ஒரு தனிமனிதன் உணவில்லாமல் இறந்து படுவானா பின், அவன் வாழ்ந்த சமுதாயத்தை அழித்தொழிக்க வேண்டும் என்பது பாரதியின் சூளுரை!

“தனியொருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!”

என்பது பாரதியின் கவிதை. தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள்,

“அண்டையன் பசியில் வாட
அணங்கொடு மாடி வாழ்தல்
மண்டையின் குற்ற மன்று
மன்னிடும் ஆட்சிக் குற்றம்”