பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 81

ஞானியானவன் தன் கருத்தை, சரி என்றும், அதை உலகத்தவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் சண்டை போடமாட்டான். வாக்குவாதம், சண்டை, மனஸ்தாபம் இவைகளை உண்டுபண்ணும் சுபாவம் தன் சத்துருக்களோடு மட்டுமல்ல, சிநேகிதர்களையும் சத்துருக்களாகச் செய்து வருகிறது.

விவேகியோ தான் அன்போடு காட்டிய மெளனத்தால், சிநேகிதர்களின் வாத்சல்யத்தைப் பலப்படுத்துகிறதோடு விரோதிகளையும் சிநேகிதர்களாக்கிக் கொள்கிறான்.

இத்துறையில் வெற்றி பெற்று விளங்கியவர் சீன நாட்டுத் தத்துவ ஞானி கன்பூவியஸ். நமது நாட்டில் புத்த பகவான். ஏன்? ஏசுவின் வரலாறு சிறந்த எடுத்துக்காட்டு. அன்பும் ஞானமும் கூடிப் பிறந்த மெளனம் இம்மையிலும் வெற்றிகளைத் தரும். இன்ப அன்பு கலந்த அமைதியையும் தரும்.

பாரதி, பக்தி நெறியில் நம்பிக்கை உடையவன். ஒருவனுக்கு மெய் பக்தி உதயமானதும் அவன் எவருக்கும் எளியவனாய் எவற்றையும் நேசிக்கிறான்.

ஆகவே, அவன் எவருக்கும் அன்பு, தியாகம் அடிப்படையில் அடிமையாகிறான். அவன் எந்த உயிருக்கும் தொண்டு செய்தலை ஆர்வ விருப்புடன் செய்வான். தனக்கெனச் சிறிதும் பெருமை தேடாது எவருக்கும் பெருமை உண்டுபண்ணுகிறவன் எவனோ, அவனே எல்லோரும் ஏத்திப் புகழும் ஈசுவரன், பெயருக்கு தகுதியானவன்.