பக்கம்:சமுத்திரக் கதைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகலிகைக் கல்

97


நின்றார்கள். அந்தம்மா பேசப்போவதாக நினைத்து இவரும், இவர் பேசப்போவதாக நினைத்து அவளும் சிறிது இடைவெளி நேரம் கொடுத்த பொழுது, கடைசியில் வைத்திலிங்கமே வாய்திறந்தார்.

“ஏய் கிழவி... எதுக்காக காலிங்பெல்ல அழுத்துனே?”

அப்போதுதான், ஆயாவிற்கு தனது விரல்களில் ஒன்று செய்த தவறு புரிந்தது. ஆள்காட்டிவிரல், சுவிட்சை அழுத்தியபோது, வெறுமனே உள்ள மோதிர விரல் அழைப்பு மணியை அழுத்தியிருக்கிறது. ஆயா, அத்தனை விரல்களையும் எதிரிகளை உதறுவதுபோல் உதறிய படியே தெரியாம அய்யா, தெரியாம என்று இழுத்தபோது, அந்தம்மா விளக்கம் கேட்டாளா அல்லது கொடுத்தாளா என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி கத்தினாள்.

“என்னது தெரியாமல்? பக்கத்துல வீடு இருக்கது தெரியலையா... நடு ராத்திரி என்கிறது தெரியலையா? நாங்க துங்குறது தெரியலையா? தெரியாமத்தான் கேட்கிறேன். எதுக்காக காலிங் பெல்லை அடிச்சே?”

“பால்கார்டு இருக்கிற பையை தேடுறதுக்காக லைட்ட போட்டேன். தெரியாத்தனமா { பெல்லையும் அடிச்சிட்டாப்போல... மன்னிச்சிடு மவராசி”

“என்னத்த மன்னிக்கிறது?”

அந்தம்மா, அவளை மன்னிக்கப்போவதில்லை என்பதுபோல் முறைத்தபோது, அந்த வீட்டுக்கு எதிர்வீட்டு கதவும் தானாய் திறப்பதுபோல் திறந்து கொண்டது. உயர்தர பதிப்புகள் போல் இன்னொரு ஜோடி... எதிர் வீட்டுப் பெண், தூக்கக் கலக்கத்தில் கண்களை இடுக்கியபடியே ஆயாவைப் பார்த்தாள். அவள் வீட்டுக்காரர், வைத்திலிங்கத்தை கேள்விப் பாவனையில் நோக்கினார். இதற்குள் வெளியே ஊத வேண்டிய விசிலை உள்ளே ஊதிக்கொண்டே காக்கி யூனிபார காவலாளி ஓடிவந்தார். அப்போதுதான் காக்கி உடைகளை களைந்துவிட்டு லுங்கி கட்டி படுத்தவர். மீண்டும் காக்கியை போட பத்து நிமிடம் ஆகிவிட்டது. ஒண்ணாம் நம்பர்க்காரர் கத்தினார்.