பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


(1280) என்றும் “யாதுமல்லா உரையே உரைத்துப்போய்த் த‍த்துவம் ஒன்றறியார்” (568) என்றும் சம்பந்தரும், “பொய்த்தவம் பேசுவது” (424) என்றும், “குறியறியாதுநின்று கண்டதே கருதுவார்கள்” (4580) என்றும், “கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கை தொழுமின்” (7951) என்றும் பிற நாயன்மாரும் பாடுவது காண்க.

எனவே, எதிரிகள் கூறுவன எல்லாம் அவர்களே கட்டிக் கூறுவன என்றும், இயல்பாய் இருக்கும் நிலையைக் கூறுவன அல்ல என்றும் குறிக்க, பல முறையும் “பொய்ம்மொழி நூல்” (2013) என்றும், “சொல் அவத்தம்” (2559) என்றும், “கட்டிய கட்டுரை” (1435) என்றும் சம்பந்தரும், “பண்ணிய சாத்திரம்” (5140) என்று சுந்தர‍ரும் பாடுகிறார்கள். அருகர் பௌத்தர் கூறுவது உண்மையானால், எல்லாம் இந்திர சாலமே என்றும் இதில் சொல்லளவன்றி இன்பம் இல்லை என்றும் கருதிச் “செந்துவ ராடையினா ருடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன இந்திர ஞாலம் ஒழிந்தின்புற வேண்டுதிரேல்” (1141) என்று பாடுகிறார் சம்பந்தர். “அந்தர ஞானம்” (1131) எனலும் காண்க. “சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமணர் குண்டர் மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த் தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச் செல்வார்” (1280) என்பதும் காண்க.