பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


களையும் அடிப்படையாக‍க் கொண்டு விளக்கினால் அன்றி ஒவ்வொன்றின் உண்மைநிலையையும் விளக்க முடியாது என்றும் கொள்வோர் முறைமை நிலைக் கொள்கையினர் எனலாம். ஒன்றைப்பற்றிய உண்மை ஒரு நோக்கத்தில் ஒன்றாகவும், வேறொரு நோக்கத்தில் வேறொன்றாகவும் தோன்றும் என்பர். ஒருவனே பிள்ளைகளை நோக்கத் தந்தையாகவும், மனைவியை நோக்கக் கணவனாகவும், பெற்றோரை நோக்க மகனாகவும், பாட்டனை நோக்கப் பேரனாகவும், பேரனை நோக்கப் பாட்டனாகவும், மாமனை நோக்க மருமகனாகவும், மருமகனை நோக்க மாமனாகவும் விளங்கவில்லையா? இங்கே ஒருவன் மருகனாகவும் மாமனாகவும் இருப்பதில் முரண் ஏது?

எனவே, முறைமை நிலைக் கொள்கை பலநிலைக் கொள்கையாகும். தனிநிலைக் கொள்கை ஒரு முடிபுக் கொள்கையாகும். (ஏகாந்த வாதம்) முறைமை நிலைக்கொள்கை பலமுடிபுக் கொள்கையாம்; இதனையே சைனர் அநேகாந்த வாதம் என்பர். இதற்கு ஸ்யாத்வாதம் என்றும் பெயர் உண்டு. ஒவ்வொரு முடிபும் முறைமை நிலைக் கொள்கையை ஒட்டியது என்பதனைக் காட்ட அத்தகைய ஒவ்வொரு சொற்றொடரும் வடமொழியில் ‘ஸ்யாத்’ என்று முடியும். “குடம் உள்ளது” என்பதனைக் “குடம் உள்ளது போலும்” என்று கூறுவதற்கு நேராம் இது. மாறா உண்மை அன்று என்பதனை இச்சொற்றொடர் அமைப்புச் சுட்டும்.