பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160



மண்டை கொண்டுழி தருமதியில் தேர‍ரும்
குண்டரும் (3018)
குண்டிகைக் கையுடைக் குண்டரும்
புத்தரும் (3179)
குண்டராயுள்ளார் சாக்கியர் (4099)
கையார் சோறுகவர் குண்டர்களும் துவருடை
மெய்யார் போர்வை மண்டையர் (2155)
குண்டர் வண்துவராடை போர்த்தோர் (2840)
குண்டராயுள்ளார் சாக்கியர் (4499)

இவ்வளவும் கூறியமையால், சம்பந்தர்காலத்தில் பலவகையான துறவிகள் சைவத்தை எதிர்த்து நின்றார்கள் என்பதும், அவர்களில் சாக்கியர் சமணர் என்ற இருவர் சிறப்பினர் என்பதும் இவர்களோடு ஆசிவகரும் குண்டர் எனச் சிறப்பாக‍க் குறிக்கப் பெற்றுள்ளனர் என்பதும், குண்டர் என்பது பொதுவாக அம்மணமாய் நின்றார் எல்லாருக்கும் பெயராக வழங்கியது என்பதும், அந்த வகையிலே திகம்பரச் சமணரும் குண்டர் என வழங்கப்பெற்றனர் என்பதும் விளங்கி இருக்கும். இவ்வாறு குண்டர் என்பதற்கு விரிந்த நிலையில் பொருள் கொள்ளப் பாடுவதால், இழித்துரைப்பது எளிதாகிறது. “நல்லார் அறங்கூற” என்று சம்பந்தர் பாடுவதனை முன்னரே குறிப்பிட்டோம். ஆதலின், அவர்களில் பொல்லாரையே குண்டர்கள் என அவர் பழிக்கின்றார் எனல் வேண்டும். சமணர்களின் த‍த்துவத்தை ஓரோர் இடங்களில் சம்பந்தர் எள்ளி நகையாடினாலும், அவர் பழிப்பது குண்டர்களையே என்று கொள்ள இடமுண்டு.