பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


IV

அன்பே உருவாக இவர்கள் திகழ்ந்த வரையில் உலகம் சீரும் சிறப்புமாக வாழ்ந்தது. பின் வந்தோர் பரந்தோடும் கொள்கைகளைத் திரட்டி உருட்டி ஒரு வடிவாக்கத் தொடங்கினர். உண்மை அறிவின் வடிவாம் கடவுளை மறுத்தனர்; அழகு வழிபாட்டை நிரயவழி எனப் பழித்தனர். எறும்பையும், ஈயையும் தொடவும் அஞ்சி அன்புருவானோர், தம்மொடு மாறுபட்ட மக்களைக் ‘கண்டு முட்டு’, ‘கேட்டு முட்டு’ என அன்பிலாது பழித்துப் புறத்தே ஒதுக்கினர். துறவினை அனைவரும் மேற்கொள்ள முடியுமோ? இந்நாளில் துறவிகளில் பலர் கூடாஒழுக்கம் கொண்டு திரிவது போல, அந்நாளிலும் பலர் திரிந்திருப்பர் அன்றோ? மக்கள் இயல்பு இருபதாம் நூற்றாண்டில் வேறாகவும், ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் வேறாகவுமோ அமைந்து கிடக்கும்! புத்தரும், மகாவீர‍ரும் வெட்டிவிட்ட பேராறு தேங்கித் தயங்கியது. அன்பு ஊற்று அடைபட்டது. திருநீரோடு தெருநீரும், சிறுநீரும் கலந்தன. களவு, புலை, பொய்யொழுக்கம், துன்பம் என்பவை பெருமலையாய் நீரோட்டத்தைத் தடுத்தன. அப்பர் என்ற வெள்ளி முளைத்தது. சம்பந்தர் என்ற கதிரவன் தோன்றினான். இருண்மலையும் தேய்ந்தொழிந்தது. அன்பு வழிபாடு வற்புறுத்தப்பட்டது. முன்புபோல அழகு வழிபாடும், அறிவு வழிபாடும், ஒழுக்க வழிபாடும் தமிழ் நாட்டில்தளிர்த்துத் துளிர்த்தன். பேரா-