பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


றும் பெருகி ஓடியது. மறைக்காலத்து நீரும் அதில் ஓடுகிறது. புத்தர் காலத்து நீரும் அதில் ஓடுகிறது. மகாவீர‍ர் காலத்து நீரும் அதில் ஓடுகிறது. புத்தர் கொள்கையும் அழியவில்லை. கலங்கல் நீரே தெளிந்தோடியது; பாசியே நீங்கியது. நச்சுப் புழுக்களை அன்பு மீன்கள் உண்டு நீரை அமுதாக்கின. இனிமை மிகுந்தது. இன்ப‍ப் பூ மலர்ந்தது. அறிவொளி வீசியது. பேரொளியாம் பெரியோர் ஆக்கப் பிறந்தவரே யன்றி அழிக்கப் பிறந்தவரல்லர். புத்தரும், மகா வீர‍ரும் சீர்திருத்தம் செய்த செவ்வியோராவர். அவர்களை அழிக்க வந்தார்களாக்கிய பழி அவர்களுக்குப் பின் வந்தோரைச் சேரும். சம்பந்தரைக் கொலையாளியாக்கிய பழி அவர் பின் வந்த அடியாரைச் சேரும். ஒரு சிலர்பால் மறைந்து மழுங்கி நின்ற சமணக் கொள்கைகள் சம்பந்தராலேயே தமிழர் அனைவரிடத்தும் பரவின என்பதை மறுத்தல் இயலாது. புலாலுண்ணாமை பேரறமாய் எங்கும் பரவியது எப்போது? அறவொழுக்கத்தே புகாதவர் வீடு பெறுவதில்லை என்பதை எதுபோது தமிழர் பெரிதும் வற்புறுத்தத் தொடங்கினர்? கள்ளுண்டு புலால் தின்றவர் அன்றோ இவ்வாறு மாறினர்? எரியோம்பலும் ஊனமில் வேள்வியாய் விட்டது. கள்ளும் புலாலும் ஒழித்து, மாவும் அப்பமும் உண்டு களித்துப் பலர் தீயுருவிற் சிவனைத் தொழலாயினர்.