பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


2. சமணரும் கடவுளே


I

இவ்வொற்றுமைக் காட்சி, யாம் இன்று புத்தம் புதியதாக‍க் கண்டதொன்றன்று. சம்பந்தர் கண்ட காட்சியேயாம்; அவரது பாடல்கள் வழியாக நாம் ஒரு சிறிது உணர்ந்ததேயாம். எல்லாம் இறைவன் வடிவு என்பதும், எவர் செயலும் இறைவன் செயல் என்பதும் அப்பெரியாருடைய துணிபு. அங்ஙனமாயின் சமணர் செயலும் சிவன் செயல் என்பது திண்ணம். அவர்களும் இறைபணி செய்கின்றனர். ஆண்டவனது திருமொழியே பேசுகின்றனர். என்னை? எப்பொருளும் இறைவனானால் எச்சொல்லும் இறைவனையே அன்றோ குறிக்கும்? அவ்வழியாக நோக்குமிடத்து ஆண்டவனைப் போற்றாதார் இல்லை; புகழாதார் இல்லை.

“உரையாதாரில்லை யொன்று நின்றன்மையைப்
பரவாதாரில்லை நாள்களும்”


“பூத்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி
ஏத்தாதா ரில்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளிமழு வாளங்கை
கூத்தீரும்ம குணங்களே”


“தாதார் கொன்றை தயங்கு முடியுடை
நாதா என்று நலம்பு கழ்ந்து
ஓதாதார் உளரோ திருவோத்தூர்
ஆதீரே அருள் நல்குமே”


என்று பாடுகின்றார் சம்பந்தர்.