பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


எனவே, இவ்வகையில், இறைவனது அருள்வழி நின்ற புத்தர், சமணர் முதலானோர் செய்யும் வழிபாடும், புனைந்துரைக்கும் திருப்புகழும் ஆண்டவனையே சேரும். மேனோக்காக நோக்குமிடத்து, அவருரைகள் ஆண்டவனைப் பழிப்பதாகத் தோன்றினாலும், அந்தப் பழிக்கும், அவனை அன்றிப் பொருள் வேறில்லாமையால், அவனது திருப்புகழாய்ச் சிறப்புறுகின்றன. அவர்களும் உயிர் வாழ்ந்து உலகில் உயர்ந்து விளங்குவது அவனருளே அன்றோ? அன்னோர், ஆண்டவனைப் பழித்துரையாடினாலும், தாம் தாம் அறிந்த அறவழியில் நிற்கின்றனராதலின், அம்மட்டில், அவ் அறத்தின் பயனை அவர்களுக்கு அருளுவிப்பவனும் ஆண்டவனே அன்றோ?

“போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்
நீதியாக‍க் கொண்டங் கருளும் நிமலன்.”

[போதி- புத்தர் அறிவு விளக்கம் பெற்ற ஆலமரம்; போதியார் - புத்தர்கள். பிண்டி - மகாவீர‍ர் அறிவு விளக்கம் பெற்று விளங்கும் அசோகமரம்; பிண்டியார் - சமணர்கள்.]

என்ற உண்மையை நிலை நாட்டுகின்றார். அவர்கள், இகழ்ந்து பேசுவதும் சிலரிடைக் காணக்கிடக்கும் குற்றத்தை முதலாக‍க் கொண்டே அன்றோ? குற்றங் களைவதும் கோயிலமர்ந்த கோமானின் குறிப்பன்றோ? அவ்வகையிலும் அவர்களது மறவுரை அறவுரையாகின்றது.