பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

v


இந்நூல் சமுதாய இயக்க இயலில் தமிழில் எழுந்த முதல் முயற்சியாம். ஆதலின் இதன் குறைகளைப் பிறரினும் நான் நன்கு அறிவேன். ஆயினும், விளங்காத பாடற்பகுதிகளை விளக்க முயன்றுள்ளேன். அறிஞர் ஆராய்வாராக.

திருப்பாதிரிப்புலியூர் சைவச் சிறப்பு மாநாடு தமிழ்நாட்டு வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. அப்போது, ஞானியார் அடிகள் “திருஞான சம்பந்த”ரைப்பற்றி அவர் பெயரால் காஞ்சியில் வளர்ந்த கழகத்தில் பேசும்படி அன்போடு ஆணை தந்தனர். திரு.வி.க அவர்கள் தலைமையில் அச்சொற்பொழிவு நிகழ்ந்தது. பின்னர் திரு.வி.க-வின் வற்புறுத்தலின்மேல் அச்சொற்பொழிவுக் குறிப்புக்களை விளக்கி அப்பாவலர் நடத்தி வந்த தேசபந்துவில் எழுதி வந்தேன். முற்றுப் பெறாது போன அக்குறிப்புக்களை நண்பர் திரு.T.S. உமாபதி பதிப்பிக்க முனைந்தார். அப்போது ஐந்து பகுதிகளோடு முடிவுற்றிருந்த இந்நூலின் 6-ஆம் பகுதியைப் பல குறிப்புகளை விளக்கி எழுதினேன். ஏறக்குறையக் கால் நூற்றாண்டுக்குப் பின் இக்குறிப்புக்களை எழுதிச் சேர்த்தேன். எனவே முன்னுக்கும் பின்னுக்கும் முரண் உண்டு எனக் கருதவேண்டா. ஆசீவகர் குண்டர் என்ற கருத்துக்களை ஆராய முற்பட்டுச் சில விளக்கம் தந்துள்ளேன். மற்றைய விளக்கங்கள் நான் கண்டன அல்ல. பிறமொழிகளில் உள்ளனவற்றைத் தமிழில் எழுதியதே என்னுடைய தொண்டு. ஆராய்ச்சி, முடிவின்றி ஆண்டவன் போலச் சென்று விளங்குவது. ஆதலின் மற்றையோர், இங்குக் கூறியவற்றை மேலும் ஆராய்வர் என்ற நம்பிக்கையிலேயே இவற்றை வெளியிடத் துணிந்தேன்.