பக்கம்:சம்பந்தரும் சமணரும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


போற்றிக் காத்திலர் என்கின்றார் சம்பந்தர். இடக்கரடக்கலாக‍க் குரத்திகட் பேணார் என்று பாடுகின்றார் என்றும் சிலர் கூறுவர்.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவும் தரும்.

என்றபடி அகத்துறவு இல்லாரின் புறத்துறவு என்ன என்ன தீமைகளை விளைத்தது? ஆனால், காமத்தால் கண்ணழிந்தார்கள் இவர்கள் எனக் கொள்ள வேண்டுவதில்லை. திகம்பர சமணத்தின் அடிப்படையையே இங்கு சம்பந்தர் எதிர்க்கின்றார் என்பதே மேல். ஆண் மக்களே வீடு பேற்றிற்குரிய் என்பதே அக்கொள்கை. ஆதலின், பெண்கள் துறவு பூண்டாலும் வீடு பேற்றிற்கு உரியர் அல்லர் என்பர். ஆதலின், ஆண்துறவிகளைப் போலப் பெண் துறவிகளை இச்சமணர்கள் பேணிப் போற்றுவது எங்கே?

‘என் செய்வர்! காதலையும் வாயினையும் அடக்க முடியாது கெட்டனர்! உள்ளத்தினும் உடலமே வலியதாயிற்று’ என்பர் சிலர். ஆனால், அம்மட்டோடு எதிரிகள் நின்றார் இல்லை; கொலைப் பழியும் பூண்டனர். சம்பந்தர் அடியாரோடு கூடியிருந்த இடத்திற்குத் தீயிட்டனர் - பலர் கூடியிருந்த இடத்திற்குத் தீயிட்டனர் - பொது இடத்திற்குத் தீயிட்டனர்- பிறர் வந்து உதவா வகையும் உள்ளிருப்போர் அறிந்து தப்பிப் பிழையா வகையும் நள்ளிருளில் தீயிட்டனர் - வஞ்சனையால் தீயிட்டனர்: இவர்கள் எண்ணம் என்ன?