பக்கம்:சரிந்த சாம்ராஜ்யங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

75



ஜுலியஸ் சீசர் தன் போர்த் திறமையால் தோற்று வித்த சாம்ராஜ்யம் அவன் உடல் மறைந்த அன்றே மறைந்துவிட்டது. கிரேக்கத்தில் ஒப்பற்ற நாகரீகம் ஒன்றை உருவாக்கி, உலக இலக்கியத்திலே ஒரு சில பகுதிகளில் அடைக்கலம் புகுந்துவிட்டதும் ஒரு சாம்ராஜ்யம் தான். லூயி மன்னர்கள் பிரான்சிலே, பரம்பரை பாத்தியத்தில் கட்டுவித்த சாம்ராஜ்யம் பாஸ்டில் சிறையிலே அடைக்கலம் புகுந்துவிட்டது. எகிப்தில், நைல் நதியின் ஓரத்தில், பாலை நிலத்தின் விளிம்பில் தோன்றிய சாம்ராஜ்யம் பிரமிட் கோபுரங்களில் குடிபுகுந்துவிட்டது மண் ஆசை பிடித்து உலகைத் தன் கைக்குள் கொண்டு வரவேண்டுமென்று படை திரட்டி இப்பாரைப் பவனி வந்த அலெக்ஸாண்டரின் சாம்ராஜ்யம் பாபிலோன் நகரில் தன் கடைசி கட்டத்தை அடைந்துவிட்டது.

அதே போலத்தான் இந்தியாவில் தோன்றிய சாம்ராஜ்யங்களும் மறைந்துவிட்டன. ஆனால் இந்த மண்ணில் தோன்றி மறைந்த அரசுகளுக்கும், இமய மலைக்கு அப்பால், மேல் நாடுகளில் தோன்றி மறைந்த சாம்ராஜ்யங்களுக்கும் மாறுபாடுகள் உண்டு, இங்கே மதவெறியால் சாம்ராஜ்யம் தோன்றியது. மற்ற இடங்களில், மதவெறியால் சாம்ராஜ்யங்கள் அவ்வளவு அதிகமாகத் தோன்றியது இல்லை, ஆரியம் இங்கே அரசு அமைத்திருக்கிறது. இஸ்லாம் இங்கே அரசோச்சியிருக்கிறது. அன்பு அரியாசன மேறியிருக்கிறது. ஆனால் எந்த சாம்ராஜ்யமானாலும் அழிந்து போகும் தன்மை கொண்டது. மக்கள் பாலத்தின் மீது கட்டப்படாத சாம்ராஜ்யங்கள் தரை மட்டமாகிவிடும்.