பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தம்மையும் தம்மைச் சார்ந்தவர்களையும் மட்டும் ஓர் உயர்ந்த பிறப்பினராகக் கருதுபவர், சாதிகள் இறைவனால் வகுக்கப்பெற்றன; அவை வேதங்களில் கூறப் பெற்றுள்ளன; எனவே அவை இருக்க வேண்டும்; அவற்றின்படிதான், அவரவர் சாதிக்கென்று வகுக்கப்பெற்றுள்ள முறைகளைத்தாம் எல்லாரும், பின்பற்றுதல்வேண்டும்; வாழ்க்கை நடத்துதல்வேண்டும் என்று கூறுபவர் எப்படிக் குறுகிய மனப்பான்மை இல்லாதவராவார்? அறிவியல் முன்னேறி வரும் இவ்விருபதாம் நூற்றாண்டுக் காலத்திலும், சாதிப்போராட்டங்கள், வகுப்புப் போராட்டங்கள் மிகுந்து வருகின்றனவே என்று நீலிக் கண்ணிர்வடிக்கும் தலைமையமைச்சர், இப்படிப்பட்ட கருத்துடையவர் ஒருவரின் விழாவில் எப்படிக் கலந்து கொள்ளலாம்? இந்திரா, காஞ்சி காமகோடியார் மக்களுக்கு வழிகாட்டி' என்கிறார். ஆனால், காஞ்சி காமகோடியாரோ, 'சாதிகள் இறைவனின் படைப்பு; அவற்றின் படிதான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும்' என்கிறாரே! எனவே, இந்திரா தலைமையமைச்சராக இருந்து, எல்லாப் பிரிவினர்க்கும் சமநிலை உணர்வுடன் பாடாற்றுவார் என்பதை எப்படி நம்புவது? இதிலிருந்தெல்லாம் நமக்கு என்ன தெரிகிறது என்றால், 'பார்ப்பனீயம் என்றைக்கும் தம் நச்சுத் தன்மையை நீக்கிக் கொள்ளாது' என்பதுதான். பேசுவது ஒன்று, நடப்பது ஒன்று. நாடும் அரசியலும் இப்படி இரட்டைத்தனமான போக்கில், எதிரெதிரான திசையில் போய்க்கொண்டிருந்தால், இழிவுபடுத்தப்படுகின்ற பெரும்பான்மையான மக்கள் கிளர்ந்தெழாமல் என்ன செய்வார்கள்? அவர்கள் தங்களுக்குள் தாங்களே ஒரு முடிவை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே, இந்திரா போன்றவர்களின் போக்குகளால் ஏற்படுகின்ற முடிவு.

போராடுவது எப்படி ?

இனி, இத்தகைய சாதியொழிப்புப் போராட்டங்களை நாம் தொடங்குவதற்குமுன் ஒன்றை நன்றாக எண்ணிப்பார்த்துக் கொள்ளல் வேண்டும். முதலில் இப் போராட்டத்திற்கு முன் நம்மவர்கள் அஃதாவது சாதிகளால் அடிமைப்பட்டுக் கிடப்பவர்களை நன்றாக விழித்துணரச் செய்வதும், ஒற்றுமைப்படுத்த வேண்டுவதும் தலையாய கடமைகள்.

முதலில் சாதியுணர்வு போக வேண்டாமா?
பொருளியல் முன்னேற்றத்திற்காகத்தான்
நாம் ஏன் அதைப் பாராட்டவேண்டும்?

சாதிகளுக்கு அடிப்படையாக உள்ள மத ஆளுமையே பார்ப்பனீயமாக இங்கு மலர்ந்துள்ளது. எனவே, பார்ப்பனீயத்தை (பார்ப்பனர்களை யன்று) நாம் தகர்க்க விரும்பினால், அதற்கான முயற்சிகளை நாம் பார்ப்பனர்களிடம் செய்யக் கூடாது; செய்து பயனில்லை.

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/12&oldid=1164314" இலிருந்து மீள்விக்கப்பட்டது