பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நான் என்ன சாதி ?

'தென்மொழி'யின் தொடக்கக் காலத்திலேயே நான் என்ன சாதி என்று கேட்டுத் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் அளவுக்கு மேல் இருந்தது. அவரவர்கள், நான் அவர்கள் சாதியாக இருந்து விட மாட்டேனா என்று ஏக்கத்துடன் இருந்ததும் எனக்குத் தெரிந்தது. சிலர் அவ்வாறே நினைத்தும் மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். பலர் என்னிடம் நேரிடையாகக் கேட்கத் தயங்கினார்கள். சிலர் வேறுவகையான ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபட்டார்கள். சாதி ஆசையையும் அங்காப்பையும் விடாத ஒரிருவர் என்னை நேரிடையாகவே ஒரிருமுறை கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம் நம் கொள்கையையே விடையாகக் கூறி அவர்களது சின்னத்தனமான ஆசையைக் கடிந்திருக்கின்றேன்.

பாவாணரைப்பற்றியும் இந்தச் சிக்கல் இருந்தது. ஏனோ தெரியவில்லை; சிலருக்கு அவர்கள் கற்ற கல்வியைவிட, கொண்ட கொள்கையை விட, இந்தச் சாதிப் பித்து மிகுதியாக வளர்ந்திருக்கிறது. கல்லாதவர்களைவிடக் கற்றவர்களிடந்தான் இப்பித்து மிகுதியாக விருக்கிறது என்றுஞ் சொல்லலாம். இதில் சிலர் போலித்தனமான ஒருவகைப் பெருமையையே வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வந்த சாதிப்பற்று மிக்க அன்பரொருவர் 'பாவாணர் இன்ன சாதியென்று சொல்லுகிறார்களே; உண்மையா' என்று என்னிடம் ஒருமுறை கேட்டடார், 'ஏன், அதைத் தெரிந்து கொண்டுதானா அவர் நூல்களை நீங்கள் படிக்கத் தொடங்குவீர்கள்?' என்று நான் அவரைக் கேட்டேன். அதற்கவர் 'இல்லை இல்லை; சும்மா கேள்விப்பட்டேனே என்றுதான் வினாவினேன்' என்று பல்லை இளித்தார்.

அண்மையில் ஒருவர் (மிக மிக நெருக்கமான ஒருவர்) இந்த ஆராய்ச்சியில் ஒரு முடிவைக் கண்டுபிடித்திருக்கிறார். சில நேரங்களில் சிலரைப் பற்றிக் குறிப்பிடும் போது "அவர் நம்ம ஆள் " என்று அவரிடம் குறிப்பிட்டிருக்கின்றேன். அதனால் நான் அவர் சாதிதான் என்று நினைத்துக்

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/60&oldid=1164394" இலிருந்து மீள்விக்கப்பட்டது