பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம் குழந்தைகளை எத்துணையளவு முடமாகவும் மூடமாகவும் ஆக்கி விடுகின்றன என்பதை அவர்கள் உணர்வதில்லை.

கல்விக் கூடங்களிலும் நம் இளைஞர்களுக்கு உரிமைகள் தரப்படுவதில்லை. ஆரியர்களால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றனர். உரிமையற்ற அடிமை உணர்வையே ஒழுக்கம் என்றும் பண்பாடு என்றும் அவர்கள் வரையறை செய்து விடுகின்றனர்.

ஒழுக்கம் என்பது தனக்குத் தானே தடையாக அமைந்து கொள்ளாத
ஓர் உயிரூக்க உணர்வு.


அதே போல் பண்பாடு என்பது பிறர்க்குத் தான் தடையாக அமைந்து
விடாத ஒரு மாந்த வளர்ச்சி உணர்வு.


முன்னது அகத்தது; பின்னது புறத்தது!


இவற்றைத் தவறாகப் பொருள் கொண்டு, பெற்றோரின் கட்டு திட்டங்களுக்கும், உற்றாரின் உதவாக்கரைக் கட்டுப்பாடுகளுக்கும், அடங்கி நடப்பதே ஒழுக்கம்; பொருளற்ற புன்மைச் சாதிக் கட்டுக்கள் ஒடுங்கி கிடப்பதே ஒழுக்கம் அறியாமையும் மேலாளுமையும் உள்ள மதச் சேற்றுக்குள் மூழ்கிக் கிடப்பதுதான் ஒழுக்கம் என்று பலவகையாக தவறாக - அடிமைத்தனமாக-விரிவாக்க உரை செய்யப்பெறுகிறது.

அதேபோல், பொருளியல் முடக்கமும், தந்நல முயற்சிகளும், அரசுக்கும் ஆட்சிக்கும் கட்டுப்பட்டுக், கடந்த காலக் குமுகாய, அரசியல், சாதியியல், மதவியல் நெறி முறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் அடங்கி அடிமையுற்றுக் கிடப்பதே பண்பாடு என்று, பழம்பழமைத் தனமாக விரிவுரை செய்யப் பெறுகிறது.

இவ்வகைக் கட்டுபெட்டித் தனங்களாலேயே இந்த நாட்டு மக்கள், குறிப்பாக நம் தமிழின இளைஞர்கள் உரிமை உணர்வின் பெருமையையும் அடிமை நீக்கத்தின் இன்றியமையாமையும் உணர முடியாதவர்களாகவும் விடுதலை வெளியின் மூச்சுக் காற்றை உயிர்க்க முடியாதவர்களாகவும் உள்ளனர் என்றால் அது தவறான குற்றச்சாட்டு ஆகாது.

இக் கால இளைஞர்களை முதலில் இவ்வுயிர் உரிமைத் தளைகளிலிருந்து, வாழ்வியல் நெருக்கடிகளிலிருந்து, ஆண்டான் அடிமைக் கோட்பாடுகளிலிருந்து விடுவித்தல் மிக மிக இன்றியமையாதது. நம் உயிருக்கும் உள்ளத்தின் உணர்வுகளுக்கும், அறிவு மூச்சுக்கும் தடையாக நாமோ நம் குமுகாயமோ, நம் அரசியலாளர்களோ அறியாமல் அமைத்துக் கொடுத்துள்ள குமுகாய வலைகளை அறுத்தெரியுங்கள்! அவர்கள் நமக்குப் பூட்டியுள்ள சாதி சமய விலங்குகளை உடைத் தெறியுங்கள்! அவர்கள் நமக்கு இட்டுள்ள குடும்ப குழும்பத் தடைகளைத் தகர்த்தெறியுங்கள்!

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/63&oldid=1164398" இலிருந்து மீள்விக்கப்பட்டது