பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அஞ்ச வேண்டியும் உள்ளது. ஆனால், சாதி வேறுபாடுகளை அத்துணை விரைவில் ஒழித்துவிட முடியும் என்னும் நம்பிக்கையற்ற தன்மையால், அவை இருக்கும்வரை, சலுகைகள் இவற்றின் அடிப்படையால் கொடுக்கப் படவேண்டிய கட்டாயத்தை நமக்கு உருவாக்கித் தந்துள்ளதாகவே நாம் கருத வேண்டும். சாதி இருக்க வேண்டும் என்பது மண்டலுடையதோ, அல்லது நம்முடையதோ ஆன கருத்தன்று. மக்களின் பின் தங்கிய அல்லது முன்னேறிய தன்மைகளைக் கண்டு அறிவதற்கு, இச் சாதியமைப்பே தலையான-முகாமையான ஓர் அளவீடாக, இன்றைய அளவில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ் விந்திய நாடு பல்வேறு வகைச் சிக்கல்களுக்குரியதான ஒரு நாடாக இருந்து வருவதை நாம் எல்லாரும் அறிவோம். பல்வேறுபட்ட நிலைகளில், பல்வேறு வகைப்பட்ட இன மக்கள் முன்னேற்றம் இன்றித் தாழ்த்தப்பட்டும், பிற்படுத்தப்பட்டுந்தாம் உள்ளனர். அவர்கள் அனைவரையும் அரசியல் என்னும் நிலையிலோ அல்லது பொருளியல் என்னும் ஒரு நிலையிலோ மட்டும் சலுகை தந்து முன்னேற்றி விட்டால் மட்டும் போதும் என்று நினைத்து விடக்கூடாது. இதில், தவிர்க்க முடியாத ஓர் இக்கட்டான நிலை என்னவென்றால், நம் மக்களிடை உள்ள எந்த சாதிப்பிரிவு ஒழிக்கப்பெற வேண்டும், மக்களெல்லாம் சாதி வேறுபாடற்ற ஒரே மக்களினமாக மதிக்கப் பெறவேண்டும் என்று அன்றுமுதல் இன்றுவரை உள்ள பொதுமைநல அறிஞர்கள் கருதினார்களோ, நாமும் கருதுகின்றோமோ, அதே சாதிப் பிரிவுகளை நிலைபெறச் செய்யுமாறு, அவற்றின் அடிப்படையிலேயே அவர்களின் முன்னேற்றத்திற்குரிய திட்டத்தை வகுத்துக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்பதுதான். இது நம் நிலையில் பெரிதும் வருந்துவதற்கும் இரங்குவதற்கும் உரிய அவலமான சூழலாகும்.

இந்நிலையில் இன்னொன்றையும் கருத வேண்டியவர்களாக நாம் உள்ளோம். ஆண்டாண்டுக் காலமாக, எதிர்பாராமல் இறுகி விட்ட சாதி அமைப்புக் குமுகாயத்தில், உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு, தன் ஆளுமை ஆட்சி அதிகார ஆற்றல்களால் நீண்டநெடிய வளமான வாழ்க்கை வசதிகளைப் பெற்று வந்த மேல் சாதிக் கூட்டமும், தன் பொருளியல் வலிமையால் அவற்றை விலை பேசி வளைத்துப் போட்டுக் கொண்டு, தன் வயப்படுத்தியிருந்த வணிக வாய்ப்புக் கும்பலும், தம் சாதிவெறியையும் பணவெறியையும் விட்டுக் கொடுக்காமலேயே, அவ்வாய்ப்பு வசதிகள் போய் விடக்கூடாதே என்று எண்ணுவதும், வர விருக்கின்ற மண்டல் குழுத் தீர்வால், கிடைக்க இருக்கின்ற வாழ்க்கை வசதி வாய்ப்புகளை இனியேனும் பெற்றுத் தன்னை ஈடேற்றிக் கொள்ளுவதற்கு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, பாட்டாளி, உழவாண்மை மக்கள் துடிதுடிப்புடன் முனைந்து நிற்பதும், அரசுக்குப் பல்வேறு வகையான

65

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/67&oldid=1164498" இலிருந்து மீள்விக்கப்பட்டது