பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

நினைத்து உள்ளம் நொந்தான். தன் பிழையை உணர்ந்தான். பொருள் அழிந்த புன்மையை நினைந்து நாணிப்புலம்பினான். இழந்த பொருளை ஈட்டிப்பண்டே போற் பெருவாழ்வு வாழ விரும்பினன். இரவு பகல் எப்போதும் அவ்வேட்கையே அவன் உள்ளத்தில் தலை தூக்கி நின்றது. அதனால் அப் பெருவாழ்வளிக்கும் பொருட் செல்வத்தை ஈட்டும் வழிவகைகளையே எப்போதும் எண்ணிக்கொண்டிருந்தான். அந்நிலையில் அந்நகர் வணிகர் சிலர், பொருளீட்டும் பணிமேற்கொண்டு பாய்மரக்கலம் ஊர்ந்து புறநாடு செல்கின்றனர் என்ற செய்தியைக் கேட்டான். உடனே அவருடன் அயல்நாடு செல்ல அவனும் துணிந்தான்.

கடையரும் விரும்பாக்கணிகையர் தொடர்பில் தன்னை மறந்திருந்ததையும் தாங்கிக்கொண்டு உயிர் வாழ்ந்திருந்த வளாதலின், ஆதிரை, பொருளீட்டும் பெரும்பணி மேற் கொண்டு புறநாடு போகும் அவன் பிரிவைப் பொறுத்துக் கொண்டு போக விடை தந்தாள். பரத்தையர்ப் பிரிவின் போது, கணவன் புறநகர்க்கு அணித்தாக ஓர் ஊர் வாழ்வினனாகவும், அப்பிரிவைப் பொறுக்கமாட்டாது புலம்பிய ஆதிரை, அவன், கடல் கடந்து, கண்ணால் காணமாட்டா, கருத்திற்கும் எட்டாத் தொலை நாடுகட்குச் செல்லத் துணிந்தான் எனக் கேட்டும், அப்பிரிவு பாராட்டத்தக்க பணி மேற்கொண்டு செல்லும் பிரிவாதல் எண்ணிச் சித்தம் கலங்காது, செல்ல மகிழ்வோடு விடை தந்தாள். பரத்தையர்ப் பிரிவால் உடைமைக்கும் ஒழுக்கத் திற்கும் மட்டுமே கேடு, உயிர்க்கு எக்கேடும் இல்லை என அறிந்தும் அப்பிரிவைத் தாங்க மாட்டாது தளர்ந்த ஆதிரை, கடல் கடந்து செல்பவர், கேடுறாது வந்து கரை சேர்வர் என்பதற்கு உறுதியில்லை; இடை வழியில்