பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

றிற்கு மட்டும் பயன்படுத்தப்பெருது, வட்டு, சூது, பரத்தையர் உறவு போலும் பழிமிகு செயல்களுக்காகவும் பயன்படுத்தப் பெற்றது. இவ்வாறு பாடுபடாது பெரிது பெற்ற பொருளைப் பாழ்படுத்தும் பண்பிழந்தார் சிலரும் புகார் நகரில் வாழ்ந்திருந்தனர்.

ஆதிரை கணவன் சாதுவனுக்கு அத்தீயோர் தொடர்பு எவ்வாறோ உண்டாகிவிட்டது. அதனால் அவன் மனையை மறந்தான்; மனைவி தரும் வாழ்வை மறந்தான். வட்டரங்கும், சூதாடு கழகமும், பரத்தையர் சேரியுமே வாழிடமாகக் கொண்டான். வட்டிலும், சூதிலும் அவன் வான் பொருள் அழிந்தது. பரத்தையர்க்கு வாரி வாரிக் கொடுத்ததால் மாடென்றும் மனையென்றும், பொன்னென்றும் பொருளென்றும், மணியென்றும் முத்தென்றும் வகை வகையாகக் குவிந்து கிடந்த அவன் செல்வம் சீரழிந்தது. பழிமிகு இவ்வாழ்வில், அவன் வாணாளின் ஒரு பகுதி, பாழுற்றது.

வளம் பெருக்கும் வாணிக வாழ்க்கையைக் கைவிட்டமையாலும், கைப்பொருள் அழிக்கும் கணிகையர் தொடர்பு போன்றனவற்றைக் கைக் கொண்டமையாலும், மலைபோற் குவிந்து கிடந்த அவன் மாநிதி மறைந்து விட்டது. சாதுவன் வறியனான். வாரி வாரி வழங்கிய அவன் கை வற்றிவிட்டது. அதை உணர்ந்து கொண்டாள் அவன் உளங்கவர்ந்த கணிகை. அவள் கருத்தெல்லாம் அவன் தரும் செல்வத்திலல்லது அவனிடத்தில் இல்லையாதலின், அவன் செல்வம் சீரழிந்து விட்டது என்பதை அறிந்துகொண்டதும், அவனுக்கு வாயிலை அடைத்துவிட்டாள். கணிகை வீட்டுக் கதவு அடைக்கப்பட்டுவிட்டதைக் கண்டு கொண்ட பின்னரே, சாதுவனுக்கு அறிவு தெளிந்தது. தன் ஒழுக்கக்கேட்டை