பக்கம்:சாத்தன் கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

கொளாது, கொடுப்பதைக் குறைகொடாது, தமவும் பிறவும் ஒப்ப மதிக்கும் வாணிக அறம் பிறழாது வாழ்ந்தமையால் அவ் வணிகர் மன்னரும் மருளும் மாநிதி பெற்று மாண் புற்றனர். அவர் வாழ்ந்த புகார் நகரும் வற்றாப் பெருநிதி பெற்றுப் பெருமையுற்றது. அத்தகைய வணிகர் குலத்தில் ஆதிரை எனும் ஓர் ஆரணங்கு பிறந்து வளர்ந்து பேதைப் பருவம் கடந்து பெதும்பைப் பருவம் பெற்று விளங்கினாள். மகள் மணப்பருவம் பெற்றுவிட்டமை கண்ட அவள் பெற்றோர், தம்மைப் போலும் பெருவணிகர் குடியைச் சேர்ந்த சாதுவன் எனும் இளைஞனத் தேர்ந்து மணம் முடித்து வைத்தனர்.

ஆதிரை இல்லறத் தலைவி ஆனாள். அறவோர்க்கு அளித்தல், அந்தணர் ஒம்பல், துறவோரை வழி படல், செல்விருந்தோம்பி வருவிருத்து பார்த்திருத்தல் முதலாம் இல்லறக் கடமைகளை உள்ளன்போடு மேற்கொண்டு வாழ்ந்தாள். சாதுவனும் அவள் அழகும், அவளாற்றும் இல்லறச் சிறப்பும் அளிக்கும் இன்பத்தை ஆர நுகர்ந்து மகிழ்ந்திருந்தான். அவர் வாழ்க்கைத் தோணி, இன்ப மென்னும் கடலில் மெல்ல இயங்கிக்கொண்டிருந்தது.

சில ஆண்டுகள் கழிந்தன. அவர் வாழ்க்கைக் கடலில் புயல் எழத் தொடங்கிற்று. புகழ்ச் செல்வமும் பொருட்செல்வமும் மலிந்த புகார் நகருக்குப் பழிசூட்டும் பண்புகெட்ட வாழ்க்கையுடையார் சிலரும் அப்புகார் நகரில் வாழ்ந்திருந்தனர். புகார் நகரத்துச் செல்வர்கள். வற்றா வளம் பெற்று வாழ்ந்தமையால் உழைப்பின் பயனை மறந்தனர். உழைப்பின் அருமையினை உணரமாட்டாமையால் அவ்வுழைப்பின் பயனாம் செல்வத்தின் சிறப்பினையும் அவர்கள் உணர்ந்திலர். அதனால் அவர் கைப்பட்ட செல்வம், ஈதல், புகழ் என்பன போலும் பயனுடையவற்