உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

134

ருக்கு இத்தகைய அபவாதம் வரலாமா? அனாவச்யமாய், அநியாயமாய் எஜமான் மீது பழியைச் சுமத்திய அந்தச் சண்டாளர்களாகிய வெள்ளைக்காரப் பாவிகளைச் சும்மா விடக் கூடாது. ஏதோ போலீஸார் அவர்களையும் லாக்கப்பில் வைத்திருப்பதையே தாளாது, பல வெள்ளையர்கள் ப்ரமாதமாய்ச் சீறி எழுந்து, அவர்களை விடுதலை செய்யப் போராடுகிறார்கள். சின்ன எஜமான்! சத்யமாக இந்தக் காரியத்தை அதே வெள்ளையர்கள்தான் துணிந்து செய்திருக்க வேண்டும்: தான் ஒரு இந்துப் பெண்ணின் மனத்தைக் கெடுத்து, மாற்றி விவாகம் என்கிற ஒரு பந்தத்தை உண்டாக்கிக் கொண்டு, அந்தப் பெண்ணின் சொத்துக்களையும், தானே அபகரிக்க வந்தவிடத்தில், இத்தகைய விபரீதம் நடந்து விட்டதால், அந்த வஞ்சம் தீருவதற்காக அந்தப் பாவிகள்தான் இக்காரியத்தைச் செய்திருக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை. நம் எஜமானரை விடுதலை செய்ய, நாம் உடனே ப்ரமாதமான முஸ்தீப்புகளுடன் வேலை செய்ய வேண்டும். எங்களுக்கு இந்த கஷ்டம் சகிக்கவே முடியவில்லை”… என்று தம் தம் அபிப்ராயத்தைச் சொல்லிக் கண்ணீர் விட்டார்கள்.

சற்று புத்தி தெரிந்த குழந்தைகள் ஓடி வந்து, “டாக்டர் மாமா எப்போ வருவா?… டாக்டர் எங்கே போயிருக்கா?” என்று களங்கமற்ற உள்ளத்துடன் கேட்பதைக் கண்டு, தாமோதரனுக்கு இதுகாறும் அனுபவித்தறியாத விதம் மனத்தில் ஏதோ செய்து, பலவித உணர்ச்சிகளை உண்டாக்கியது. “சின்னஞ் சிறு குழந்தை முதல் பெரிய கிழவர்கள் வரையிலும், பெரிய பெரிய ஞானிகள் முதல் பிச்சைக்காரர்கள் வரையிலும் போற்றிக் கொண்டாடக் கூடிய ஒரு திவ்ய சக்தி வாய்ந்த அபூர்வ மனிதனை, நான் உடன் பிறந்த அண்ணனாகப் பெறும் பாக்யத்தைச் செய்திருந்தும், அந்த அருமையை—அந்த உயர்வை—அறிந்து நடந்து இன்புறாது, கேவலம் அவனை எனது ஜென்ம விரோதி என்ற உணர்ச்சியுடனல்லவா, என் வாழ்-