உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ.103-வது நாவல்

154

போய் சோகமே வடிவாய்ப், புலம்பிக் கொண்டிருப்பார், சிபார்சுக்கு வேண்டுவார், என்றெல்லாம் மனத்திற்குள் எண்ணியவாறு, அட்டகாஸமாய் வந்தவருக்கு, தாமரை இலை நீர்த் துளி போன்ற வைராக்யத்துடன், தன்னை வரவேற்கும் டாக்டரைப் பார்த்து, உண்மையில் முழ உயரம் தூக்கி வாரிப் போட்டது! சற்று நேரம், ப்ரமிப்புடன் மவுனமாகவே நின்றார்.

இவரைக் கண்ட டாக்டர் மிகவும் சாந்தமாயும், அமைதியாயும் பார்த்து, “ஸார்! ஏன் ஏதோ மாதிரி நிற்கிறீர்கள்? என்ன சமாச்சாரம்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

ஜெயிலர்:--ஸார் ! நீங்கள் அஸகாய சூரர், ஸார்! நானும், ஜெயில் உத்யோகத்தில் வந்து பல வருஷங்களாகின்றன. இதற்குள், கணக்கற்ற கைதிகளை அதிலும் வித விதமான குற்றங்களைச் செய்தவர்களை, செய்ய உடந்தை இருந்தவர்களை, தூண்டி விட்டவர்களை, படாப் பழி ஏற்றவர்களை—ஆக, பல ரகங்களில் நான் பார்த்திருக்கிறேன். எப்படிப்பட்டவர்களும், இம்மாதிரி மேல் கோர்ட்டுக்கு மாற்றி விட்ட பிறகு ஒரு அப்பீல் செய்வார்கள்… அதிலும் தோல்வியான பிறகு ஒரு அப்பீல்… இப்படியாக கடைசி வரையில் எட்டிப் பார்த்து விடுவதே தொழிலாகச் செய்வார்கள். அத்தகைய லீலையைத்தான் நான் கண்டிருக்கிறேன். அதோடு அத்தகையவர்களின் பரிதாபகரமான புலம்பலையும், சோகக் கண்ணீரின் நெஞ்சுருக்கும் தன்மையையுந்தான் பார்த்திருக்கிறேனேயன்றி, உம்மைப் போல் நிச்சிந்தையாய், ஒரு அணுவளவும் விசனமே இல்லாத, மன உறுதியுடன் கூடிய மனிதரை, என் ஜீவிய காலத்தில் நான் இது வரையில் பார்த்ததே இல்லை, ஸார்! உம்மைத்தான் முதல் முறையாகப் பார்க்கிறேன். என் வியப்பு கரை கடந்து செல்கிறது.

ஸ்ரீத:-(மறுபடியும் ஒரு பெரிய சிரிப்பு சிரித்தபடியே) ஸார்! இதற்கா தாங்கள் இப்படி வியப்புக் கடலாடுகிறீர்கள்!