உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாந்தியின் சிகரம்

171

களைப் போட்டுக் கட்டியவாறு, பேஷண்டை நன்றாக உற்றுக் கவனித்தான். மூச்சு இருக்கிறதா? இல்லையா?… என்கிற ஒருவித சந்தேகமே உண்டாகி விட்டது. பல உயர்ந்த மருந்துகளை ஊசி குத்தியவாறு, நோயாளியை வெகு கூர்மையாய், ஏதோ அதிர்ச்சியுடன் ஆழ்ந்து கவனித்தான்… ஊசி குத்துவதற்காகக் கையை எடுத்துப் பார்த்த போது, தீயை மிதித்தவன் போல், கூறத் தரமற்ற அபாரமான அதிர்ச்சியுடன், அந்தக் கையை அப்படியே பார்த்துக் கதி கலங்கி விட்டான்… கையில் ராஜரத்னம் என்ற பெயர் பச்சை குத்தியிருந்ததோடு, ஒரு பக்கம் சிறிய படகும், ஒரு பக்கம் தாமரைப் புஷ்பம் போன்ற கோலமும் பச்சை குத்தியிருந்ததைக் கண்டான்.

அவ்வளவுதான்!… வானமே இடிந்து, இவன் தலையில் விழுந்து விட்டது போன்றும், உலகமே தட்டாமாலை ஆடுவது போல், சுற்றுவது போன்றும் ஒரு உணர்ச்சி வேகம் அவனைச் சுற்றிக் கொண்டு வதைத்துத் திக்குமுக்காடச் செய்து விட்டதால், அவனே மயக்கம் போட்டு விழுந்து விடுவான் போலாகி விட்டான்! தனக்குள் “ஹா !… சோதனையே! இத்தகைய வேடிக்கையும், நீ பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டாயா? இவர் என் பிதாவல்லவா! என் சிறிய பிராயத்தில், இதே பச்சைக் குத்து வடுவையும், கன்னத்திலுள்ள ஆபரேஷன் காயத்தையும் பார்த்தது இன்னும் மறக்கவில்லையே! இவரா கொலைகாரக் கைதி?… இவருமா இங்கிருக்க வேண்டும்? ஐயையோ ! இந்த ரகஸியத்தை வெளியாரறியாதவாறு எப்படி மறைப்பது ?”… என்றெல்லாம் தனக்குள் பல விதம் எண்ணியவாறு, ஊசி குத்தாமல், திக்ப்ரமை பிடித்தது போலிருப்பதைக் கண்ட ஜெயிலருக்கு ஒன்றும் புரியாத சந்தேகம் உண்டாகி விட்டது. எதற்காக, இம்மாதிரி அதிர்ச்சியினால் தாக்கப்பட்டவன் போலிருக்கிறான்? ஒரு வேளை, உயிர் போய் விட்டதா?… என்ற சந்தேகத்துடன்… "ஸார்! என்ன யோசிக்கிறீர்கள்? … கைதியின் உயிர் போய் விட்டதா?… என்ன? சீக்கிரம் சொல்லுங்கள்” என்றார்.