வை. மு. கோ. 103-வது நாவல்
208
என் மனைவி … ஐயோ! இந்த நாற்ற வாயால்… அந்த உத்தமியைச் சொல்லவும், எனக்கு அருகதை இல்லை. அத்தகைய உத்தமி எனக்குப் படித்துப் படித்துத்தான் புத்தி சொன்னாள். அது மட்டுமா! நான் ஒரு தாசியை மறுமணம் செய்து கொண்டிருந்தேன். அந்த தாசி எத்தனை தூரம் புத்தி சொல்வாள் தெரியுமா! நான் அப்போதெல்லாம் மனித—ம்ருகமாய் கேடு கெட்ட நிலைமையில் இருந்ததன் பலனை, இப்போது சரியாக அறிந்து விட்டேன்.’
டாக்டர் இடைமறித்து, “ஏம்பா! ஒரு மனைவி இருக்கையிலா, மறு மனைவியைத் தேடினாய்… ஐயோ! ஒழுக்கம், உண்மை, நாணயம், சத்தியம், இவைகள் ஒன்று இருக்கிறது என்பதையே நீ நினைத்தும் பார்க்கவில்லையா! ஐயோ! பாவம். சர்வலோக ரக்ஷகியாகிய சாக்ஷாத் பராசக்தியான உமை இருக்கிறாளே! அந்த உமையை நாம் அடைவதற்கு மத்தியில், ஒரு அரண் சேர்ப்பது போல் மூன்று சுழி ‘ண்’ என்ற எழுத்தைப் போட்டுக் கொண்டு, நாம் உண்மையான மார்க்கத்தில் நடந்தால், அது உமையின் தரிசனத்திற்குக் கொண்டு விடும். அதற்கு வாழ்க்கைப் பாதையை, பக்தி என்கிற காப்புடன் நடத்த வேணும், உமையை அடைய ‘ண்’ என்பதைச் சேர்த்தது போல், பக்தி என்பதில் ‘க்’ என்ற அக்ஷரத்திற்குப் பதிலாக ‘த்’ என்பதைச் சேர்த்தால், பத்தி என்ற பதமாகும். பத்துவது என்றால், எதைத் தெரியுமா! உண்மையுடன் உழைத்து உமையின் பாதத்தைப் பத்துவதாகும். அந்த தேவியின் பாதத்தைப் பத்திய பிறகு, இனி கவலையோ, பாபமோ, துன்மார்க்க ப்ரவர்த்தகமோ உன்னை வந்து அணுகவே பயப்படுமே. இதை நீ நினைக்கவே இல்லையே…”