உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207

சாந்தியின் சிகரம்

தீர்கள். நான் வேணுமென்று தானே காலை, கோடாலியால் நசுக்கிக் கொண்டேன். அதனாலாவது சாவு வரட்டுமென்று எதிர்பார்த்தால், நீங்கள் தடையாக வந்து சேர்ந்தீர்களே!” என்று தன்னுடைய மனத்திலுள்ள வெறுப்பை அப்படியே எடுத்துக் காட்டுவது போல், பேசுவதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு வியப்பிலும் வியப்பாகத் தோன்றியது.

‘ஆதியில் எல்லாம் நல்ல நீதி நெறியுடன் இருந்து, வாழ்க்கை நடத்தாதவர்களுக்கு, ஆட்டங்கள் ஆடிப் பாடி ஓய்ந்த பிறகு, ஒரு விதமான வெறுப்பும், வாழ்க்கையே கசந்து விடுவதும் சகஜந்தானே, அந்த கோஷ்டியில் இவரும் சேர்ந்தவராதலால், இப்போது ஞானம் உதயமாகி, ஒரு சிறிது ஞானக்கண் திறந்திருக்கிறது. பாவம்…’ என்று தனக்குள் எண்ணியபடியே, “ஏம்பா! நீ பேசுவதைப் பார்த்தால், உலகத்தில் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை—உன் கையினால் நீ சம்பாதித்த சொத்துதான் உன்னுடைய உயிரும், என்கிற மனோபாவத்தில் பேசுகிறாயே; அந்த உயிர் உன்னுடையதல்ல, கடவுளுடையது. அதைச் சில காலம் உன்னிடத்தில் கொடுத்து வைத்துப் பிறகு, அவன் சொத்தை அவன் எடுத்துக் கொண்டு போவான் என்கிற ஞானமே இல்லாமல் பேசுகிறாயேப்பா—இதோ பாரப்பா, தற்கொலை செய்து கொண்டாவது சாக வேணும் என்ற அதீதமான எண்ணத்திற்கு வரும்படி வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி விட்டாயே! அந்த ஞானத்தில் அரைக்கால் வாசியாவது ஆதியில் ஸ்திரமாகக் கொண்டிருந்தால், இந்த கதிக்கு வருவாயாப்பா!”

என்று முடிப்பதற்குள், நோயாளி, ‘உம்… அத்தனை தெளிந்த புத்தி எனக்கிருந்தால், நான் இந்த கதிக்கு வந்திருப்பேனா! எனக்குத்தான் புத்தி மங்கிப் போச்சே!