உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

241

சாந்தியின் சிகரம்

உடைகள் எவ்லாம் அழுக்காகி விட்டதால், லாண்டரிக்குச் சென்று, உடைகளை வாங்கி வரச் சென்றேன். நீங்கள் தேள் கொட்டிய அதிர்ச்சியால், அயர்ந்து தூங்கி விட்டீர்கள். சீக்கிரம் வந்து விடலாம் என்று போனேன். தாயே! சொல்லக் கூட பயமாயிருக்கிறது. நானோ, இந்த ஊருக்கே புதியவள். மனம் உடைந்து போன வேகத்தில், எப்படியோ பிழைக்கலாம் என்று வந்த இடத்தில், உங்களுடைய பேராதரவு கிடைத்ததே என்று பூரித்தேன். அதை பகவான் உடனே சிதறவடித்து விட்டார். நான் இனி இங்கு வரவே மாட்டேன். உங்களிடம் நேற்று நம்பிக்கையாய் சொல்லியதற்காக, ஒரு பரம ரகஸியத்தை உங்களிடம் சொல்லி, உங்களையும் எச்சரிக்கவே வந்தேன்…”

இதைக் கேட்டதும், வெள்ளை மாதின் இதயம் நூறு மைல் வேகத்தில் அடிக்கத் தொடங்கியது. “என்னை எச்சரிப்பதற்காக வந்தாயா? பரம ரகஸியமா? சொல்லு மேரி, சீக்கிரம் சொல்லு” என்று பதறினாள். மேரி தன்னை சமாளித்துக் கொள்வது போல் நடித்து, “தாயே! இந்த ஊரில் யாரோ துரைக்கண்ணன் என்ற ஒரு ப்ரபு இருந்தாராம். அவர் பெண் சீமையில் படித்தாளாம். எந்த வெள்ளையனையோ மணந்தாளாம்… இங்கு வந்தாளாம்… ஏதேதோ கொலை நடந்ததாம்… விவரம் எனக்கு ஒன்றுமே தெரியாது தாயே! அந்தக் கொலை வழக்கில் நீங்களும் சம்மந்தப்பட்டிருப்பதாயும், போலீஸார் இது பற்றி சகல விவரங்களும் விசாரித்து விட்டதாயும், உடனே உங்களைக் கைது செய்யப் போவதாயும், நானும் கூட இருந்தால், என்னையும் கைது செய்து விடுவார்கள் என்றும், ‘இனி நீ அங்கு போகவே கூடாது. உன்னை நான் காப்பாற்றுகிறேன், நீ இங்கேயே இருந்து விடு’ என்று ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் ரக-