உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

48

மாய் ஏதோ பேயோ, பிசாசோ, முனீச்வரனோ, காட்டேரியோ ஏதோ ஒரு துர்த்தேவதைதான் வந்திருக்க வேண்டும்—என்று வேலைக்காரர்கள் தீர்மானமாய் முற்றுப்புள்ளி வைத்துச் சொல்லி ஊர்ஜிதப்படுத்தியதோடு, “அம்மா! புழக்கடை சாமிக்குப் பொங்கலிட்டு பூசை போட்றேன்னு வேண்டிக்கங்க!… சின்னையாவுக்கு மந்திரக்காரனைக் கூப்பிட்டு மந்திரிச்சுடுங்க!”…என்று அபிப்பிராயம் வேறு சொல்லத் தொடங்கினார்கள்.

ஸ்ரீதரனும் வீடு பூராவும், ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு, நிச்சமாய்க் கள்ளனில்லை என்று தெரிந்ததால், தம்பியிடம் வந்து அவனைச் சமாதானப்படுத்தினான். “டேய்! பேயாவது, பிசாசாவது?… இதெல்லாம் சுத்தப் பொய்ப் புரட்டு. மனிதனைப் பார்த்து பிசாசு பயப்பட்டு நடுங்கும் என்பது ப்ரத்யட்சம். பகவானையே சதா நம்பியுள்ள எந்த மனிதனையும், பிசாசு மட்டுமல்ல, எமன் கூட கிட்டே அணுக மாட்டான். பக்தி என்ற பெரிய ரட்சை ஒவ்வொரு மனிதனையும் கட்டிக் காக்கும் தம்பீ! காறித் துப்பி விட்டு, முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு வந்து பகவானை ஸேவித்து, ப்ரார்த்தனை செய்து விட்டுப் படுத்துக் கொள்; பயப்படாதே. பகவன்னாமத்தை விட சிறந்த துணை வேறெதுவுமே இல்லை” என்று தைரியங் கூறித் தானே அழைத்துச் சென்று, முகத்தில் ஜில்லென்று குளிர்ந்த ஜலத்தை விட்டுக் கழுவச் செய்து, அழைத்து வந்து பூஜாக்ரகத்தருகில் சென்று, அவனை வணங்கும்படியாகச் செய்து, “தம்பீ! பயப்படாதே! பயத்தை எல்லாம் போக்கக் கூடிய சர்வசக்தனை மனதாரத் துதித்து வணங்கு. ப்ரார்த்தனை செய்து கொள்!… வா!… உடல் நடுங்க வேண்டாம்! ”—என்று, தானே சகலத்தையும் செய்து, தம்பியை அழைத்து வந்து படுக்க வைத்தான்.

பாவம்! ஆடு திருடிய கள்ளன் போன்றும், திருடனுக்குத் தேள் கொட்டியது போலவும், கமலவேணியம்மாள் தான் செய்து விட்ட காரியத்தின் விளைவால் நேர்ந்துள்ள நிலை-