63
சாந்தியின் சிகரம்
தானே மதி இழந்து கெட்டு விட்ட மகா குற்றத்தை உணர்ந்து வருந்தி, பிழைக்க வழியின்றி, பிச்சைக்காரியாகி விட்டாள் பாவம்! அந்தக் கொடுமையில் வ்யாதிக்காரியாயும் ஆகி விட்டதால், தனக்கு வயிறு வளர்க்க மார்க்கமே இல்லாது போய் விட்டதாம்.
என்னிடம் வந்து, ஏதாவது உதவி கோரித் தன் ஒரே பிள்ளையை வாழ வைக்கலாம் என்ற உணர்ச்சியுடன் வந்தாளாம். உன் விடுதி என்று தெரியாமல், உன்னிடம் வந்து விட்டாளாம். நீ போட்டக் கூச்சலில் பயந்து போய், நமது மோட்டார் லாயத்தில் பதுங்கிக் கொண்டிருந்தாள். அவளை நான் கண்டு பிடித்துக் கள்ளனென்று எண்ணி, போலீஸில் வைக்கத் தீர்மானித்தேன். அந்தம்மாள், அழுது கொண்டே, இந்த விஷயங்களைச் சொல்லி அப்பாவின் கடிதங்கள் சிலவற்றைக் காட்டிக் கண்ணீர் வடித்தாள்.
அதைக் கண்டதும், என் மனம் இளகி விட்டது. இனி, இம்மாதிரி அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்தால், போலீஸில் வைத்து விடுவேன், ஜாக்ரதை! என்று உஷார் படுத்தி விட்டு 100 ரூபாயைக் கொடுத்துத் துரத்தி விட்டு வந்தேன். உடனே, உன்னையும் அழைத்துக் காட்டும் பொருட்டு இங்கு அப்போதே ஓடி வந்தேன். நீ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்ததால், எழுப்பக் கூடாதென்று போய் விட்டேன். இச்செய்தி நம் அமமாவுக்குக் கூட தெரியாது. இதை, அம்மாவிடம் நான் சொல்வதற்கு ப்ரியப்படவில்லை. என்னவிருப்பினும், அம்மா மிகவும் நொந்து போய், வாழ்க்கையில் கசப்பையே அனுபவித்தவள் பாவம்! இந்த விஷயத்தையறிந்தால், அப்பாவின் பழய நினைவுகளால் பாதிக்கப் படுவதோடு, அவருடைய அக்ரமத்தினால் இப்படி அனாதைகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ! என்று இன்னும் இடிந்துப் போய் விடுவாள். ஆகையினால், நீயும் சொல்லாதே…