பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா

13

நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிட்டார். அந்தப் பதிப்பு இவருக்குத் தமிழ்கூறு நல்லுலகத்தில் பெருமதிப்பைத் தேடித் தந்தது. சிந்தாமணிக்குப் பின் பத்துப்பாட்டும், சிலப்பதிகாரமும், புறநானூறு, மணிமேகலை முதலிய நூல்களும் வெளிவந்தன. புறநானுாறு பழந்தமிழகத்தின் வரலாற்றுக் கருவூலமாக விளங்குவது. எனவே பழந்தமிழரின் கொடை வளத்தையும் வாழ்க்கை வளத்தையும் அறிந்து கொள்ளத் தலைப்பட்டார். இவர் தொண்டால் முதற் பெருங்காப்பியமான சிலப்பதிகாரம் மக்களிடையே பரவத் தொடங்கியது. பெளத்த சமய நூலான மணிமேகலை தமிழரிடையே அறக்கருத்தைப் போதித்தது. பத்துப்பாட்டின் இலக்கியப் பெருந்தமிழ் மக்களின் நெஞ்சைக் கவர்ந்தது. ஐயர் அவர்களின் பெருமையும், அறிவும், பண்பாடும்: பதிப்புத் திறமையும், தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த பாராட்டைப் பெற்றன. பின் ஐயர் அவர்கள் ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்னும் தொகை நூல்களை வெளியிட்டார். கொங்குவேள் என்னும் புலவர் இயற்றிய ‘பெருங்கதை’ என்னும் இடைக்கால இலக்கியம் அச்சுக்கு வந்தது.

இலக்கிய நூல்களைப் பதிப்பித்ததோடு அன்றி இலக்கண நூல்களையும் சாமிநாத ஐயர் நன்கு பதிப்பித்தார். புறப்பொருள் வெண்பா மாலை. நன்னூல் மயிலைநாதர் உரை, நன்னூல் சங்கரநமச்சிவாயர் உரை முதலான இலக்கண நூல்களைப் பதிப்பித்தார்.

அடுத்து, சமய இலக்கியங்களையும் இவர் திறமையாகப் பதிப்பித்தார். நம்பி திருவிளையாடல், திருக்காளத்திப் புராணம் முதலியன இவரால் வெளியிடப் பெற்றன. கோவை, உலா, அந்தாதி, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ். குறவஞ்சி முதலிய சிறுபிரபந்த நூல்கள் இவரால் உரையுடன் பதிப்பிக்கப் பெற்றன.