பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

சான்றோர் தமிழ்

முதலிய நூல்களை 1943-44ஆம் ஆண்டுகளில் எழுதினார். இவர்களுடைய ‘கள்ளோ? காவியமோ?’ என்னும் நாவல் பலர் வாழ நல்வழி காட்டியது. ‘அல்லி’ ஆணுலகிற்கு எச்சரிக்கை தருவது. ‘அகல் விளக்கு’ எனும் நாவலும் இத்தகையதேயாகும். இந்நூல் 1962ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி (Sahitya Akademi) யாரின் ஐயாயிரம் ரூபாய்ப் பரிசினைப் பெற்றது. ‘கரித்துண்டு’ ஓவியர் ஒருவரின் வாழ்வினை விளக்குவது. பெற்ற மனம் தமிழிலும் தெலுங்கிலும் திரைப்படமாக வெளிவந்த நாவலாகும். பாத்திரப் படைப்புச் சிறந்த நாவல் ‘மலர்விழி’, ‘கயமை’ சமுதாயத்தின் ஆணவங்களை அம்பலத்தில் கொண்டுவந்து நிறுத்துவதாகும். ‘வாடாமலர்’, ‘மண் குடிசை’, ‘நெஞ்சில் ஒரு முள்’ முதலிய நாவல்கள் வாழ்க்கைத் தெளிவினை வகையுற எடுத்து மொழிவனவாகும்.

சிறுகதை

‘விடுதலையா?’ என்ற தொகுப்பில் அமைந்துள்ள சிறு கதைகள், இவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்ச்சி களுக்குக் கற்பனைச் சிறகு கட்டிப் பறக்க வைத்ததன் விளைவாகும், ‘குறட்டை ஒலி’ சிறுகதை வேறு சில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இலக்கிய நூல்கள்

ஏறத்தாழ முப்பது நூல்கள் இலக்கியங்களின் பிழிவாகவும், இவர்தம் எண்ணங்களின் வடிப்பாகவும் எழுந்துள்ளன. இலக்கியத்தின் நுண்மையினை-செவ்வியினை உயர்நிலையினை இவர்கள் நன்கு உணர்ந்து கட்டுரைகள் எழுதுவார்கள்.

மொழி இயல் தொடர்பாக ஏழு நூல்களும், ஐந்து நாடக நூல்களும். நான்கு வரலாற்று நூல்களும் இவர்கள் எழுதியுள்ளார்கள்.