பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

சான்றோர் தமிழ்


சீரிய சிந்தனையாளர்

டாக்டர் மு.வ. அவர்கள் நிறையப் படித்தவர்; ஆழ்ந்து சிந்தித்தவர்; எண்ணிய எண்ணங்களை எழிலுற மக்கள் மன்றத்திலே வைத்தவர். அரியவற்றையெல்லாம் எளிதாக விளக்கிய மு.வ. அவர்கள் தம் கதை, கட்டுரை. கடிதம், புதினம் முதலியவற்றின் வாயிலாகத் தமிழ்ச் சமுதாயம் சிந்தித்துத் தெளிவு பெற்றுச் செயலாற்றத் தக்க வகையில் பல சீரிய மணிமொழிகளைத் தந்துள்ளார். அவற்றுள் சிலவற்றை ஈண்டு நினைத்துப் பார்ப்பது நற்பயன் நல்குவதாகும்.

“தமிழர்களுக்கு இனப்பற்றும் இல்லை; மொழிப் பற்றும் இல்லை. அதனால்தான் அவர்கள் இருக்க இருக்கக் கீழே போகிறார்கள்; ஆனால் பேதம் இல்லாமல் வெளியாரோடு பழகுவதில் நல்லவர்கள்.”

“தேவைகளை எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு வாழ்க்கையில் சிக்கல் குறையும்; துன்பம் குறையும்.”

“நல்லவர்கள் பிறருடைய செயலால் அழிவார்கள்; கெட்டவர்கள் தங்கள் செயலாலேயே அழிவார்கள்.!”

“பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவைகளுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை. பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வன்பும் துன்பும் செய்கின்றது. பேச்சு வள்ர்கின்றது. பிணக்கும் முற்று கின்றது; அன்பான வாழ்க்கையிலும் திடீரென்று அன்பு முறிகின்றது.”

“மக்களுக்குள் சாதி இரண்டு, இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஜாதி. எப்படியாவது வாழ வேண்டும் என்ற சாதி, இந்தச் சாதிகளுக்குள் கலப்பு மணம் கூடாது.”