பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சான்றோர் தமிழ்


இளமைப் பருவம்

அடிகள் இளமையிலேயே கல்வி கற்பதில் பேரார்வம் உடையவராக விளங்கினார். தம்முடைய முதல் பள்ளி வாழ்க்கையை வெஸ்லியன் மிஷன் பள்ளியில் தொடங்கினார். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல அடிகள் பேச்சிலும், படிப்பிலும், ஒழுக்கத்திலும் இளமையிலேயே சிறந்து விளங்கினார். அடிகளுக்குப் பத்து வயது நிறைவதற்குள், அடிகளின் தந்தையார் சொக்கநாதப் பிள்ளை இயற்கையெய்தினார். ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனப் புறநானூறு உணர்த்தும் கடமையை இவர் தந்தையார் செய்ய இயலாமற் போயினும், மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றியினைச் சிறப்பாகச் செய்தவர் நம் அடிகளார் ஆவர்.

அடிகளாரது இளமைக் காலத்தில், நாகை-நீலலோசனி, பாஸ்கர ஞானோதயம், திராவிட மந்திரி போன்ற பல கிழமையிதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ‘முருகவேள்’ என்னும் புனைபெயரில் அடிகள் பல கட்டுரைகளை இவ்விதழ்களில் எழுதி வந்தார். அந்நாளில் நாகப் பட்டினத்தில் அமைந்திருந்த ‘இந்து மதாபிமான சங்க’த்திலும் சைவசமயம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். தம்முடைய பதினைந்தாவது வயதிலே பலரும் பாராட்டும் வகையில் கட்டுரை வரையும் வன்மையும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவான சொல்வன்மையும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தவர் மறைமலையடிகளார்.

வெ. நாராயணசாமிப் பிள்ளை, சோமசுந்தர நாயகர் முதலிய சான்றோர்களிடம் இலக்கிய, சமய நூல்களைக் கற்றுத் துறைபோய புலமை பெற்றார். மதுரை நாயகம் பிள்ளை அடிகளாரின் உயிரினிய நண்பர். பட்டத்திற்காகப் படிக்காமல், புலமை வேட்கைக்காகத் தமிழார்வத்தின்