பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சான்றோர் தமிழ்

1957ஆம் ஆண்டு குழந்தை நூல்வரிசையில் சென்னை அரசாங்கக் கல்வித் துறையினர் பரிசு அளித்துப் பாராட்டினர். ‘குழந்தை இலக்கிய வரலாறு’ என்னும் நூலினை எழுதிய நண்பர் குழந்தை எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள் குழந்தைச் செல்வம் நூலில் உள்ள பாடல்களில் பாதி, பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படிப்பதற்கே ஏற்றவையாகும் என்று திறனாய்ந்து தெளிந்துள்ளார். [1] ‘குழந்தைகள் பயன் பெறுமாறு பாடிய கவி தேவி’ (தேசிக விநாயகம் பிள்ளை) என்றும், ‘தேவிக்குக் குழந்தை இல்லை, இருந்தால் குழந்தைப் பாசம் அவர்கள் அளவில் நின்றிருத்தலும் கூடும். உள்ளத்தே ஊறிச் சுரக்கும் அன்பை அழுதும் அரற்றியும் முரண்டுபிடித்தும் அக்குழந்தைகள் தடைப்படுத்தி இருக்கவும் செய்யலாம். இப்பொழுதோ தமிழகக் குழந்தைகள் அனைத்தும் அவர்கள் குழந்தைகளாகி விட்டன. அவைகளின்மீது அன்பையும் அருளையும் அள்ளிச் சொரிகின்றார்கள்.’[2] என்றும் திரு. செ. சதாசிவம் அவர்கள் கவிமணியின் குழந்தை உள்ளத்தை எடுத்து மொழிகின்றார்.

இனி, கவிமணியின் குழந்தைப் பாடல்களை வகைப் படுத்திக் காண்போமாக.

தாலாட்டு

தாலாட்டு என்ற இலக்கியவகை மிகப் பழமையானது. ‘நாக்குத்தான் குழந்தைக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக் கருவி’ என்று மொழி நூல் வல்லுநர் ஆட்டோ யெஸ்பர்சன் கூறுகிறார்.8 இந்த நாக்கு நல்ல சொற்களைச் சொல்ல முயலும் நாள்களைச் ‘செங்கீரைப் பருவம்’ என்று செப்பினர். கிலுகிலுப்பை ஒலியினைக் கேட்டு மகிழ்ந்த குழந்தையைப்


  1. குழந்தை இலக்கிய வரலாறு, ப. 27.
  2. செ. சதாசிவம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ப-118