பக்கம்:சாமியாடிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

சு. சமுத்திரம்

9

அந்த முக்கிய வீதி மட்டும் இல்லையானால், சட்டாம்பட்டி, சாதாரணமானப் பட்டியாகி இருக்கும். ஆனால் அந்த ஊரின் மேல்பக்கம், கிட்டத்தட்ட ஊரின் வேலி போல இருந்த, அந்தச் தார்ச்சாலையில், திருவள்ளுவர் பஸ்களும், கட்டபொம்மன் பஸ்களும் ஒடிக் கொண்டிருந்தன. இந்தப் பட்டியில், இந்தச் சாலையில் நின்று படிக்கட்டுகள் வழியாக பஸ்ஸுக்குள் ஏறிவிட்டால் ஒருத்தர் மதுரையில் இறங்கலாம், இன்னொருத்தர் நாகர்கோயிலில் ஒரு தூக்கம் தூங்கிட்டு எழலாம். இந்தச் சாலையில்தான் துளசிங்கத்தின் உரக்கடையும் சிமெண்ட் கடையும் பக்கத்தில் பக்கமாய் உள்ளன. எதிர்ப்பக்கம் பஸ் ஸ்டாண்ட். நான்கைந்து பெட்டிக் கடைகள் ஒரு சில தேநீர் கடைகள் வரிசையாய் இருந்தன. இவன் கடைகளுக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் வாடகை சைக்கிள் கடைகள். ஒரு வாசகசாலை. உருப்படாத ஒரு நடிகனுக்கு உள்ளூர் உதவாக்கரைப் பயல்கள் வைத்திருக்கும் ரசிகர் மன்றம். சில அரசியல் கட்சிகளின் கிழிந்துபோன கொடிகள்.

துளசிங்கம், வேலையாட்கள் சிமெண்ட் மூட்டைகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்குவதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த அளவிற்கு சிமெண்ட் மூட்டைகள் விற்காததால், வேலையாட்களைத் திட்டிக் கொண்டிருந்தான். திடீரென்று திருமலை கடைக்கு முன்னால் வந்து நிற்பதை, அவன் பார்க்கவில்லை. இருவருக்கும் இடையே உள்ள பழைய தகராறையும், அப்போது தூதுப்பயலுக்கு இருவரும் சொல்லி அனுப்பிய செய்தியையும், எதிர் செய்தியையும் தெரிந்து வைத்திருந்த வேலையாட்கள், மூட்டைகளை அடுக்காமல் திருமலையை அடுக்கடுக்காய் பார்த்தபோது, வேலை தடைப்பட்டதைப் பார்த்து துளசிங்கம் அவர்கள் பார்வை நிலைத்த இடத்தில் பார்த்தபோது -

திருமலை வேட்டியைத் தார்ப்பாய்த்துக் கொண்டு சிம்ம கர்ஜனை போட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/104&oldid=1243550" இலிருந்து மீள்விக்கப்பட்டது