பக்கம்:சாமியாடிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





10

கோலவடிவு, மீண்டும் அதே அந்த குளத்தடி வயல், பம்ப் செட்டில் குளித்துக் கொண்டிருந்தாள். ஏதோ குளிக்க வேண்டுமே என்பதற்காக குளிப்பதுபோல், தண்ணிருக்குள் தலையைக் கொடுக்காமல், காக்கா குளியலாகக் குளித்துக் கொண்டிருந்தாள். சோப்புத் தேய்க்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் எழுந்தாள். கண்கள் குளத்துக் கரையைப் பார்த்தன. அவளுக்கே தெரியும், அலங்காளி வரமாட்டாள் என்று. ஆனாலும் ஒரு சபலம். அலங்காரி அத்தை வந்தாலும் வருவாள். அவளைத் தேடி துளசிங்கமும் வந்தாலும் வருவார். அத்தையைத் தேடியா. இல்லை தன்னைத் தேடியா. கோலம், பம்ப் செட் அறைக்குள் துணி மாற்றியபடியே, தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

'பாவம் துளசிங்கம். அண்ணா அவரு கைய திருகிப் போட்டானே. இப்போ கையி எப்படி இருக்கோ..? அவரு மட்டும் என்னவாம். அண்ணா காதக் கடிக்க. ஊசி போட்டோமே. வேண்டாத சண்டை எனக்காவ இவரு விட்டுக் கொடுத்திருக்கலாம். நான் ரெண்டு கையை பிசைந்தது ரெண்டு பேருக்காவன்னு அவருக்குத் தெரியுமோ என்னவோ. என்னையும் சண்டைக்காரியாய் நினைக்கப் போறாரு. அப்படி நெனக்கப் படாதுன்னு அலங்காரி அத்தேகிட்ட சொல்லணும். முடியுமானால் அவரு கிட்டயே. அதெப்படி முடியும். ஏன். வாயாலதான் பேச முடியுமா. கண்ணால பேச முடியாதா. இந்தச் சண்டையால அவர நெனக்கக்கூட எனக்கு தகுதியில்லாம போயிட்டே நல்ல வேளை அப்பா அண்ணாவைத்தான் திட்டுனாரு அடிக்கக்கூட போயிட்டாரு. துளசிங்கம் நல்ல பையன்னு வேற சர்ட்டிபிகேட் கொடுத்தாரு.. அலங்காரி அத்தைகிட்ட சொல்லணும். அந்த அத்தைக்கு மூள இல்ல. நான் இங்க இருப்பேன்னு தெரிஞ்சு வரவேண்டாம். அத்தைக்குத் தான் மூள இல்ல. அவருக்குமா. சீச்சி. இதுக்குமேல நினைக்கறது இன்னும் கோபம் ஆறாத எங்கண்ணாவ அவமானப் படுத்தறது மாதிரி..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/111&oldid=1243568" இலிருந்து மீள்விக்கப்பட்டது