பக்கம்:சாமியாடிகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

233

சாமியாடிகள் 233

திருமலை, புஷ்பத்தை இழுத்துக்கொண்டே போனான். கீழே கிடந்த அலங்காரி எழுந்திருக்க முயன்றும் முடியாமல், "அய்யய்யோ. அய்யய்யோ.. இந்த அநியாயத்தைக் கேக்க ஆளில்லையா" என்று அந்த இழுவையை ஆள்காட்டி விரலால் கட்டிக்காட்டிக் கத்தினாள். திடீரென்று புஷ்பத்தைப் பிடித்த திருமலையின் கை, துண்டித்து விழுந்ததுபோல், அவளிடம் இருந்து விடுபட்டு கீழே தொங்கியது. அவன் கன்னங்களில் மாறி மாறி அறை விழுந்தன. அவன் தன்னைத் தாக்கிய தந்தையை அதிர்ச்சியோடு பார்த்தபோது, இன்னும் ஆத்திரம் போகாத பழனிச்சாமி மகனின் பிடறியிலும் போட்டார். இதற்குள் இரண்டு பேர் அவரைப் பிடித்துக் கொண்டார்கள். இன்னும் நான்கு பேர் திருமலையைப் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டிற்குள் போனார்கள். அவனை வீட்டுக்குள் போட்டு, கதவை அடைக்கும் சத்தம் கேட்டது.

அக்கம் பக்கத்தில் இருந்து ஆட்கள் ஓடி வந்தார்கள். தெற்குப் பக்கம் வைக்கப்படப்பு வேலையில் ஈடுபட்ட நான்கைந்து பேர், அருவி போல் கீழே குதித்து, ஆறுபோல் ஒடி வந்தார்கள். மாடு மேய்க்கப் போன சிறுவர்கள் மாடுகள் போல் பாய்ந்து வந்தார்கள். புளியந்தோப்பு பக்கம் போன பெண்கள், தோட்டம் தொறவுக்குப் போய் கொண்டிருந்த விவசாயத் கூலித் தொழிலாளர்கள், அப்படி இப்படியாய் கூட்டம் குவிந்தது. கால்மணி நேரத்தில் ஊரே அங்குக் கூடிற்று. புதிதாக வந்தவர்கள் ஏற்கனவே வந்தவர்களிடம் என்ன விஷயம் என்று கண்களாலும், வாயாலும் கேட்டதுதான் மிச்சம். எவருக்கும் என்ன நடந்தது என்று சொல்லத் தெரியவில்லை. அப்படிச் சொல்லத் தெரிந்தவர்களுக்கு, அந்த சொற்களில் தாங்கள் இரு பக்கத்தில் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பது தெரிந்துவிடாமல் இருக்க, வாய்களைப் பூட்டிக் கொண்டார்கள்.

புஷ்பம் உடைந்த வளையல்களை, ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டபடியே விம்மினாள். அவள் முன்னங்கைகள் ரத்தச் சிவப்பாய் தோன்றின. ஜாக்கெட்டில் ஒரு கைப்பகுதி இரண்டாகத் தொங்கி, அவள் தோள்பட்டையைத் தனியாகக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/235&oldid=1243795" இலிருந்து மீள்விக்கப்பட்டது