பக்கம்:சாமியாடிகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

சு. சமுத்திரம்


"சரி. எந்த ஸ்டேஷன்னுதான் பார்ப்போமே." "பழனிச்சாமியே சும்மா இருக்காரு. நமக்கென்ன.."

"ஒருவேள திருமல ஊர்ல இருந்தா, கொலகில பண்ணிப்புடுவான். ரெண்டு நாளைக்கு ஸ்டேஷன்லயே இருக்கட்டுன்னு நெனக்காரோ. என்னவோ. என்ன சொல்ற பற்குணம்."

"அவரு, பாவம் மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம துடிப்பாரு. நாமதான் ஏதாவது செய்யனும். வாங்கப்பா ஊரத் திரட்டிக்கிட்டுப் போயி போலீஸ்ல கேட்போம். திருமல ஆத்திரத்துல செய்ததை பெரிசா எடுக்கப்படாதுன்னு சொல்லிப் பார்ப்போம். இல்லன்னா வக்கீலப் பிடிச்சு ஜாமீன்ல எடுப்போம்."

"இப்போ போலீசுக்குப் போயிட்டா அப்புறம் சுடலைமாடன் கொடைய நிறுத்த முடியாது. அதோ பாருங்க. நம்ம குடும்பமும் கரும்பட்டையான் குடும்பமும் தல தாழ்ந்து நிக்கோம். செறுக்கி மவணுவ திமிரப் பாருங்களேன்."

ஒருத்தர் காட்டிய திசையை எல்லோரும் பார்த்தார்கள். முதலில் ரசித்தும் பிறகு வெறுத்தும் நோக்கினார்கள்.

ஆசாரிமார்குடி அருகே அறுபது செம்பட்டையான்கள் மேளதாளத்தோடு வந்தார்கள். கெட்டுமேளச் சத்தம் காதைத் துளைத்தது. நாதஸ்வரக்காரர்களும், மேளக்காரர்களும் பின்புறமாய்த் திரும்பித் திரும்பி ஊதிக்கொண்டும் அடித்துக் கொண்டும் நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் ஒரு சாமியாடி உடம்பு முழுக்க சந்தனம் அப்பியிருந்தார். தலையில் ஒரு குடம் - சின்னச் செப்புக் குடம். அதன் வாய் மாதிரியான தலையில் ஒரு தேங்காய். இடையிடையே சாய்த்துச் செருகப்பட்ட மாவிலைகள். அவர் குடம் விழாதபடி உடலைக் குறுக்கிய போது ஐந்தாறு செம்பட்டையான்கள் கழுத்துக்களில் மாலைகளைப் போட்டுக் கொண்டு கையில் பிரம்புகளை வைத்துக்கொண்டு சாமியாட்டம் போட்டார்கள். துள்ளித் துள்ளி. தாவித்தாவி. தொலைவில் இருந்து இதைப் பார்த்த காத்துக் கருப்பன்களால் பொறுக்க முடியவில்லை. பற்குணம் குரல் கொடுத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/258&oldid=1244093" இலிருந்து மீள்விக்கப்பட்டது