பக்கம்:சாமியாடிகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

285

சாமியாடிகள் 285

நினைக்கும்போது, அந்த நினைப்பின் ஒவ்வொரு அசைவும், நினைக்கப் படுகிறவர்கள் இதயத்திலும் ஒரு அசைவை உருவாக்கி, அந்த அசைவே நினைத்தவரின் சிந்தனையாய் மாறும் என்று நினைப்போமே, அந்த நினைப்பில் நடந்தாள்.

என்றாலும், ஊரை நெருங்க நெருங்க, ஒடிப்போன கேவலம், அவள் உடம்பில் களைப்பாகவும், உள்ளத்தில் உளைச்சலாகவும் ரூபமெடுத்தன. இருண்டிருந்த காளியம்மன் கோவில், அவள் முகத்தை இருளடையச் செய்தது. சுடலைமாடசாமி கோவிலின் விளக்குப் பிரகாசம் அவள் கண்களைப் பறித்து குருடாக்கியது.

ஊருக்குள் வட்டமடித்து, வேறு வேறு பாதைகளில் நடந்து நடந்து, இறுதியில் வீட்டுப் பக்கம் வந்தாள். உள்ளே எல்லாமே தலைவிரி கோலமாய். தலைகீழாய் கிடப்பதைத் தொலைவிலேயே பார்த்துவிட்டாள். அம்மாவின் விசும்பல் கேட்டு, உள்ளே ஒடப் போனாள். அப்பாவின் பொருமல் கேட்டு தாவப் போனாள். ஆனாலும் கால்கள் நடந்தால், முதுகு நின்றது. முதுகு வளைந்தால், கால்கள் நின்றன.

சொந்த வீடே, அன்னிய வீடானதுபோல் தோன்ற, அவள், அந்த வீட்டின் வடக்குச் சுவர்ப்பக்கம், வேற்றுப் பெண்ணாய் போனாள். லேசாய் வியாபித்த பொட்டல்வெளி. அதில் கட்டை வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் தவழ்ந்து தவழ்ந்து போனாள். அதன் பைதாக்களுக்குள் (சக்கரங்கள்) உடம்பைக் குறுக்கிக் கொண்டாள்.

வெளியே நடப்பதைப் பார்க்கும் போதெல்லாம், உள்ளே ஓடிப்போய் விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்ற வேகம். அதே சமயம் வீட்டில் நடப்பதைப் பார்க்கும்போது, வெளியே ஒடி, பாழுங் கிணறு ஒன்றின் பாறைப் பற்களுக்கு தீனியாக வேண்டும் என்ற உந்தல்.

கோலவடிவு - அந்த பெயருக்கு எதிர்மாறாய் கிடந்தாள். வீட்டையும் தொலைவில் உள்ள ஒரு ஆழக் கிணறையும் மாறி மாறிப் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/287&oldid=1244104" இலிருந்து மீள்விக்கப்பட்டது