பக்கம்:சாமியாடிகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமியாடிகள்

301

சாமியாடிகள் 301

மண்ணெல்லாம் அவள் விரல்களில் அப்பின. அவள் நடக்கவில்லையானால், தலைமுடி பிய்ந்து, அவர் கையில் வந்திருக்கும். கோலவடிவு, வலிதாங்க முடியாமல் நடந்தாள். மன வலியை உடல் வலி சிறிதாக்க, உடல் வலியை மனவலி சிறிதாக்க, அவள் கால்களைத் தாவிப் போட்டு, எலி டாக்டரின் இழுப்பு வேகத்தைவிட அதிக வேகத்தில் நடந்தாள். அந்த வீட்டிற்கு வெளியே உள்ள முச்சந்திக்கு வந்ததும், எலி டாக்டர், கோலவடிவை விட்டு விட்டு, "வீட்டுக்குள்ள வந்தே, வெளில வராமத்தான் போவே" என்று எச்சரித்து விட்டுப் போய்விட்டார்-ஆட்டுத் தலையை, அதிகாரப் பிச்சையில் கேட்பதற்கு.

கோலவடிவு குன்றிப்போய் நின்றாள்.

அவளுக்கு அருகே, முச்சந்தியின் ஒரு மூழிக்கல்லில், தன்னந்தனியாய்ச் சிக்கிக் கொண்ட ஒரு பூணிக் குருவியை இரண்டு காகங்கள் சுற்றி வளைத்துக் கொத்திக் கொண்டிருந்தன. இந்த குருவிகள் கூட்டமாக குடும்பமாக தத்திக் கொண்டிருக்கும் போது, அவற்றை சிநேகித முறையில் பார்த்த காகங்கள்தான் இவை. இப்போதோ, குடும்பத்திலிருந்து தனிப்பட்ட அந்த சின்னக் குருவியை, மேலும் தனிப்படுத்தி, வியூகம் போட்டு, அதன் உடம்பை சுரண்டிச் சுரண்டி ரத்தப் பிழம்பாக்கிக் கொண்டிருந்தன. இவற்றிற்கு எதிர்த் திசையில், நான்கு நாய்களுக்கு இடையேயான இடைவெளிக்குள் தாவி தப்பிக்கலாமா அல்லது தாக்கித் தப்பிக்கலாமா என்பதுபோல், ஒரு பூனை பதுங்கிப் பார்த்தது.

எலி டாக்டர் பிடித்த தடயத்துடன், தலைமுடி கூம்பி நிற்க, அவள் சிலிர்த்தாள். கண் மூடியபடியே கதியற்று நின்றாள். பழக்கப்பட்டச் சத்தம் கேட்டு லேசாய், அரை இருளாய்க் கண் விழித்தாள். துளசிங்கம், ஒரு சினிமாப் பாட்டைப் பாடாய் படுத்திக் கொண்டு வந்தான். அவளைப் பார்த்து திடுக்கிட்டவன்போல் சிறிது நின்றான். பிறகு அவள் முதுகைப் பிடித்துத் தள்ளியபடியே கத்தினான்.

"வெட்டாம்பட்டியில். எவன் கூடடி படுத்தே...? படுத்த பயல கூட்டிக்கிட்டு இப்பவும் போ. இங்கே ஒனக்கு என்ன வேல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/303&oldid=1244166" இலிருந்து மீள்விக்கப்பட்டது