பக்கம்:சாமியாடிகள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

சு. சமுத்திரம்


"எல்லாம் இந்த தாசி முண்ட அலங்காரியால வந்த வினை. இவள விடப்படாது. பிடிங்கடா. பிடிங்கடா... ஏழா. நில்லுழா."

அலங்காரி நிற்கவில்லை. உயிர்பிழைக்க அவள் ஒடிக் கொண்டிருந்தாள். "ஒரு காலத்துல சொக்காரன் எல்லாரும் ஒன்னை நாயத் துரத்துறது மாதிரி துரத்தப் போராங்க பாரு" என்று பெத்த மவள் போட்ட சூடு. இப்போதுதான் வலிப்பதுபோல் ஓடினாள். இதற்குள் எலி டாக்டரும், காஞ்சானும் கூட, கூட்டத்தோடு கூட்டமாய் அவளை விரட்டினார்கள். அவள் எலி டாக்டருடன் கொஞ்சியதை காஞ்சான் நினைத்துக் கொண்டும், காஞ்சானிடம் கொஞ்சியதை எலி டாக்டர் நினைத்துக் கொண்டும் கோபாவேசமாய் விரட்டினார்கள். அவளிடம் கொஞ்சக் கொடுத்து வைக்காத கிழடு கெட்டைகள், அவளை விரட்டுவதில் காஞ்சானை மிஞ்சினார்கள். எலி டாக்டரை விட வேகமாகப் பாய்ந்தார்கள்.

அலங்காரியோ ஒரு குட்டிச்சுவரை, குதிரை போல் தாண்டி, கழுதைபோல் கத்தியபடி ஒடிக் கொண்டிருந்தாள்.

இதற்குள், அவளைத் துரத்திய செம்பட்டை வம்சம் வழியில் துளசிங்கத்தைப் பார்த்து நின்றது. பிறகு அவனை இழுத்துக் கொண்டு, பங்கு போடும் இடத்தை நோக்கி நடந்தது.

கோலவடிவு நின்ற இடத்திலேயே நின்றாள். அவளைச் சுற்றிய வீடுகளின் ஜன்னல்களில் கண்கள்தான் பதிந்திருந்தன. கால்களோ வெளிவரவில்லை. வாசலோரங்களில் கூடிக்கூடி நின்றார்கள். எவரும், எவளும் அவளை "வா" என்று அழைக்கவில்லை. அவளைப் பொறுத்த அளவில், திறந்திருந்த வாசல்களும், மூடப்பட்டவையே. அன்னி யோன்யமாகப் பழகிய உறவினர்களும் அந்நியர்களே.

கோலமிழந்து நின்ற கோலவடிவு, யாரோ தனது கையைப் பற்றியது கண்டு திடுக்கிடாமலே பார்த்தாள் ரஞ்சிதம்.

"ஏன் கோலம் மிரளுறே.? நான் இருக்கேன் கோலம். வாய் செத்த இந்த ஊரில் நாம ரெண்டுபேருந்தான் உயிரோட இருக்கோம். என் வீட்டுக்கு வா. நான் ஒன்னைக் காப்பாத்துறேன். ஒன்னை இந்த நிலைக்கு கொண்டுவந்த எல்லோரையும் விடப்போறதாய் இல்ல."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/306&oldid=1244200" இலிருந்து மீள்விக்கப்பட்டது