பக்கம்:சாமியாடிகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

சு. சமுத்திரம்

கோவிலுக்குள் போகும் தைரியமில்லை. எப்படியோ நான்கைந்து போலீஸ்காரர்கள் தைரியப்பட்டு வந்தார்கள். கோலவடிவைப் பார்க்காமல் கூட்டத்தைப் பார்த்து அதட்டினார்கள். பிறகு, கோலவடிவின் அருகே கிடந்த அரிவாளைப் பயத்தோடு பார்த்தபடியே, கோவிலுக்குள் போகப் போனார்கள். ஆனாலும் போனபாடில்லை.

ரஞ்சிதம் ஒடி வந்தாள். கூட்டத்திற்குள் ஊடுறுவி, கோலவடிவின் பார்வை படும் இடத்தில் நின்றபடியே வெறித்துப் பார்த்தாள். விரக்தி யோடு பார்த்தாள். திருமலையைப் போல் தனக்குத்தானே முனங்கிக் கொண்டாள். "என்னை துளசிங்கம் எதுவும் செய்துடப் படாதுன்னு அவனை அப்படிச் செய்திட்டியா கோலம்? அவசரப்பட்டுட்டியே கோலம். இல்ல. நீ அவசரப்படல. ஒன்னை அவசரப்படுத்திட்டாங்க."

கோலவடிவு, ரஞ்சிதத்தைப் பார்ப்பதுபோல் தெரிந்தது. சிலையில் போட்ட தலையைத் தூக்கினாள். அவளை நோக்கி லேசாக கையை உயர்த்தினாள். வெறி பிடித்தவள் போல் சிரித்துக் காட்டினாள். பிறகு பழையபடியே தலையை அம்மன் சிலையில் போட்டாள். அப்புறம் தன் பாட்டுக்குக் கிடந்தாள்.

சிறிது நேரத்தில் பழனிச்சாமி அந்தப் பக்கம் வந்தார். வாடாப்பூ அலற-சந்திரா புலம்ப-நாட்டு வக்கீல் நாராயணன் அவரை ஆதரவாய் பிடித்துக்கொள்ள, அருணாசலத்தின் தோளை ஆதரவாய், ஊன்றுகோல்போல் பிடித்தபடி வந்தார். பெற்றெடுத்த மகளைஅதிர்ந்து பேசாத செல்வத்தை, இப்போது பேயாகிப் போனவளை, நேருக்கு நேராய்ப் பார்த்தார். அவளின் குற்றங்களையும், குணங் களையும் மறந்து, மகளென்று மட்டுமே பார்த்தார். தந்தை என்று மட்டுமே பார்த்தார். பெற்ற பாசம், கண்ணிராய் கவிழப் பார்த்தார்.

அந்த பரிச்சயப்பட்ட பார்வையில் நெகிழ்ந்தவள் போல்-காய்ந்த இரும்பை தண்ணிருக்குள் திணிக்கும் போது அது எப்படி ஒலி எழுப்புமோ, அப்படி ஒசையிட்டபடியே கோலவடிவு நேர் கோடாய் எழுந்தாள். பிறகு கீழே குனிந்து துளசிங்கத்தின் தலையைத் தூக்கிப் பிடித்தபடி மீண்டும் எழுந்தாள். சிறிது நேரம் அப்படியே நின்றாள். பிறகு தந்தையை நோக்கி, அந்தத் தலையைத் தூக்கி காட்டினாள். காட்டிக் கொண்டே நின்றாள்.

(மற்றும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாமியாடிகள்.pdf/314&oldid=1244206" இலிருந்து மீள்விக்கப்பட்டது